Published : 10 Apr 2019 02:13 PM
Last Updated : 10 Apr 2019 02:13 PM

நெருப்பில் கையை வைத்து சுட்டுக் கொள்ளாதீர்கள்: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

நெருப்பில் கையை வைத்து விட்டு ஸ்டாலின் சுட்டுக்கொள்ள வேண்டாம் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வடசென்னையில் பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து இன்று (புதன்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்ட பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"பல்வேறு விஷ விதைகளைத் தூவி தமிழ்நாட்டை அழித்தது திமுக. தனிநபர் விமர்சனங்கள், தனிநபர் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தனிநபர் விமர்சனம் வந்தால் அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம். ஆரோக்கியமான, கொள்கை அரசியல் தான் சாதனை அரசியல். இதில் தான் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒருமையில்  திட்டுவது, தனிநபர் விமர்சனம் போன்றவற்றில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

ஸ்டாலினும் அவரைச் சார்ந்தவர்களும் நெருப்பில் கையை வைத்து விட்டு சுட்டுக்கொள்ள வேண்டாம். இதுதான் எங்களின் ஒரே வேண்டுகோள். நெருப்பில் கை வைத்தால் சுடும். அதனைத் தெரிந்துகொண்டு நெருப்பில் கை வைக்காமல் இருப்பதே நல்லது. வேறு வழியில்லாமல் அதே பாணியில் நாங்களும் சொல்லடி கொடுக்க வேண்டியிருக்கும்'' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து பாஜக தேர்தல் அறிக்கைக்கு ரஜினிகாந்த் அளித்துள்ள வரவேற்பு குறித்தும், கமல்ஹாசனுக்கு அவர் ஆதரவு தெரிவிக்காதது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "வாஜ்பாய் அரசுக்கு அதிமுக ஆதரவு அளித்த போது நதிநீர் இணைப்பை அமல்படுத்த வேண்டும் என ஜெயலலிதா நினைத்தார். பாஜகவின் இந்த வாக்குறுதியை நல்ல விஷயமாக, பொது நலன், தேச நலன் கருதி நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றிருக்கிறார். அது வரவேற்கத்தக்கது. பாஜக - அதிமுகவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் ரஜினிகாந்த் நல்லதற்கு ஆதரவு அளித்துள்ளார். அந்த ஆதரவை ஏற்று தமிழ்நாட்டு மக்கள் எங்கள் பக்கம் நிற்பார்கள்.

நதிநீர் இணைப்பை காங்கிரஸ் கிடப்பில் போட்டு விட்டது" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x