Published : 24 Sep 2014 04:42 PM
Last Updated : 24 Sep 2014 04:42 PM

திண்டுக்கல்: பிறக்கும் குழந்தைகள் பாலினத்தை மைக் மூலம் அறிவிக்கும் புதிய நடைமுறை

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளின் பாலினத்தை மருத்துவர்கள் `மைக்' ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கும் புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் மாதம் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு நாளைக்கு 20 குழந்தைகள் பிறக்கின்றன. மகப்பேறு அறுவைசிகிச்சை பிரிவில் ஒவ்வொரு நாளும் நிகழும் பிரசவங்களில் பெற்றோர், அவரது உறவினர்கள் பிறக்கும் குழந்தைகளுடைய பாலினத்தை அறிய ஆர்வமடைகின்றனர். அப்போது, பிரசவ அறுவைசிகிச்சை அரங்கத்தில் இருந்து வெளியே வரும் மருத்துவப் பணியாளர்களிடம், பிரசவத்துக்கு அனுமதிக் கப்பட்ட பெண்களுடைய உறவினர்கள் என்ன குழந்தை பிறந்துள்ளது என தொந்தரவு செய்து விசாரிக்கின்றனர். அவர்களும், பிறந்த குழந்தைகளுடைய பாலினத்தைக் கூறுகின்றனர். சில நேரத்தில் மருத்துவ பணியாளர்கள், அவசர கோலத்தில் தவறுதலாகவோ அல்லது பணம் கொடுக்க மறுப்பதால் திட்டமிட்டோ பாலினத்தை மாற்றி தெரிவித்துவிடுகின்றனர். அதனால், மகப்பேறு அறுவை சிகிச்சைப் பிரிவில் பிரச்சினை ஏற்படுகிறது.

கடந்த மாதம், பிரசவத்துக்கு அனுமதிக் கப்பட்ட ஆண்டிபட்டி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவ பணியாளர்கள் இருவர், ஆண் குழந்தை என தவறுதலாக அவர்களுடைய உறவினர்களிடம் தெரிவித்தனர்.

அதனால், பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறவினர்கள், மருத்துவர்கள் ஏமாற்று வதாகவும், குழந்தையை மாற்றிவிட்டதாகவும் கூறி மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் பாலினத்தை தவறுதலாக தெரிவித்த 2 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த குளறுபடிகளைத் தவிர்க்க மகப்பேறு சிகிச்சை பிரிவில் பிறந்த குழந்தைகளுடைய பாலினத்தை பிரசவம் முடிந்தபின் மருத்துவர்களே மைக் மூலம் அறிவிக்கும் புதிய நடைமுறையை மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் எம்.ரவிக்கலா தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாகர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

`மைக்' அறிவிப்பே அதிகாரப்பூர்வம்

மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் எம்.ரவிக்கலா கூறுகையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 3 அல்லது 4 குழந்தைகள், சில நேரம் 15 குழந்தைகளும் பிறக்கின்றனர். அப்போது பிறந்த குழந்தைகளுடைய பாலினத்தை, பிரசவமான பெண்ணின் உறவினர்களிடம் தெரிவிப்பதில் குளறுபடி ஏற்படுகிறது. இதை தவிர்க்க மைக் மூலம் பிறந்த குழந்தைகளுடைய பாலினம், அவர்கள் பெற்றோர் விவரம், பிறந்த நேரம், சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் வாய்மொழியாக பாலினத்தை தவறுதலாக தெரிவித்தால் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்க இயலாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x