தேர்தல் பிரச்சாரத்தில் மனைவி துர்காவைக் குறிப்பிட்டுப் பேசிய ஸ்டாலின் 

தேர்தல் பிரச்சாரத்தில் மனைவி துர்காவைக் குறிப்பிட்டுப் பேசிய ஸ்டாலின் 
Updated on
1 min read

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் தனது மனைவி துர்காவைக் குறிப்பிட்டுப் பேசினார்.

மு.க.ஸ்டாலின் இன்று அரக்கோணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

''சிலர் இன்றைக்கும் திமுகவைப் பற்றி விமர்சனம் செய்கின்றார்கள். இந்துக்களுக்கு திமுக எதிரி - எதிரி என்று. ஜெகத்ரட்சகனைப் பார்த்த பிறகுமா அதை நீங்கள் சொல்கின்றீர்கள்? தேர்தல் வந்த காரணத்தினால் சில பத்திரிகையில் தொடர்ந்து திட்டமிட்டு நாங்கள் ஏதோ இந்துக்களுக்கு எதிரி போன்ற ஒரு தோற்றத்தை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

அண்ணா, "ஒன்றே குலம் - ஒருவனே தேவன்" என்றுதான் சொன்னார். நாங்கள் என்றைக்கும் ஆண்டவனுக்கு, ஆண்டவனை வணங்கக் கூடியவர்களுக்கு நாங்கள் எதிராக இருந்தது இல்லை.

1953-ல் நான் பிறந்த நேரத்தில், வெளியிடப்பட்ட 'பராசக்தி' திரைப்படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதன் முதலில் கதாநாயகனாக நடித்து அறிமுகமான படம். அதில் ஒரு வசனம் வரும். கோயில்கள் கூடாதென்பதல்ல கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை.

வேண்டுமென்று திட்டமிட்டு, ஏதோ இந்துக்கள் கோயிலுக்குச் செல்வதை திமுக தடை செய்கின்றது. இந்துக்களுக்கு விரோதியாக இருக்கின்றது திமுக என்ற பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதையெல்லாம் நாட்டு மக்கள் நிச்சயமாக நம்புவதற்குத் தயாராக இல்லை.

நான் கட்சித் தலைவராக பொறுப்பேற்றதும், நான் பொதுக்குழுவில் பேசுகின்ற பொழுது அனைத்து மதத்தினருக்கும் நான் பாதுகாவலனாக இருப்பேன். எங்களுடைய கட்சி துணை நிற்கும். சாதி மத பேதம் பார்க்க மாட்டோம். எந்த மதத்தினருக்கும் திமுக எதிரானது அல்ல என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியிருக்கின்றேன்.

இங்கு நம்முடைய வேட்பாளர் ஓட்டு கேட்கின்ற பொழுது என்னுடைய துணைவியாரைச் சொல்லி ஒரு சொல்லைச் சொன்னார். என் துணைவியார் இன்றைக்கும் கோயிலுக்குச் சென்று கொண்டிருக்கிறார். ஒருநாள் தவறுவதில்லை. நான் தடுக்கின்றேனா? என்றைக்காவது போகக்கூடாது என்று நான் சொல்லி இருக்கின்றேனா? அது அவருடைய விருப்பம்.

ஆனால், தொடர்ந்து இன்னும் சில ஊடகங்கள் பத்திரிகைகள் தவறான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. எங்களுக்கு மக்கள் இருக்கின்றார்கள். அவர்களின் ஆதரவு இருக்கின்றது. எனவே, அதைப் பற்றி நான் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in