Published : 02 Apr 2019 04:59 PM
Last Updated : 02 Apr 2019 04:59 PM

வன்னியர் கல்வி அறக்கட்டளை: புகாரை நிரூபிக்க ஸ்டாலின் தயாரா? திமுக மொழிநடையில் கூறினால் பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்- ராமதாஸ் சாடல்

வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்த புகாரை நிரூபிக்க ஸ்டாலின் தயாரா? தவறினால் அரசியலை விட்டு விலகுவாரா? என, பாமக நிறுவனர் ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அத்துடன் கூடுதலாக தோல்வி பயமும் கண்ணை மறைப்பதால் பாமகவையும், என்னையும், எனது குடும்பத்தினரையும் பற்றி அருவருக்கத்தக்க அவதூறுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். தாம் வகிக்கும் பதவிக்கு சிறிதும் தகுதியற்ற வகையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள தகவல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், "வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள சொத்துகளையெல்லாம் ராமதாஸ் அவருடைய துணைவியார் பெயருக்கு மாற்றி வைத்திருக்கிறார். தமிழக அரசு நினைத்தால் அனைத்து சொத்துகளையும் கைப்பற்றி விட முடியும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவே அதிமுக அணியில் பாமக இணைந்துள்ளது" என்று கூறியுள்ளார். திமுகவினரின் மொழிநடையில் கூறினால், இது பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஆகும். வழக்கம் போலவே வாய் புளித்ததோ,  மாங்காய் புளித்ததோ என்று இந்த விஷயத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் உளறிக் கொட்டியிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் முதலில் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற புனிதமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட உன்னதமான அமைப்பு ஆகும். அது திமுக அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை போன்று பினாமி சொத்துக்களை பதுக்கி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதை ஓர் கட்சியின் தலைவராக உள்ள ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

கல்வி மற்றும் சமூக ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டிருந்த வன்னியர்களை கல்வியால் மட்டும் தான் முன்னேற்ற முடியும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு கேட்டு பல ஆண்டு காலம் போராட்டம் நடத்தினேன். எண்ணற்ற இழப்புகள், ஏராளமான உயிர்த்தியாகங்களுக்குப் பிறகு வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தேன்.

ஆனாலும், அரசு கல்வி நிறுவனங்களில் மிகவும் குறைவான இடங்களே இருந்ததாலும், தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லாததாலும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள குழந்தைகளின் கல்வி வாய்ப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வன்னியர் கல்வி அறக்கட்டளை மற்றும் அதன் மூலம் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் ஆகும்.

இந்த அறக்கட்டளையை அரும்பாடுபட்டு தொடங்கியவன் என்ற அடிப்படையில் அதன் நிறுவனராக மட்டுமே நான் உள்ளேன். அதைத் தவிர வேறு எந்த நிர்வாகப் பொறுப்பிலும் நான் இல்லை. வன்னியர் கல்வி அறக்கட்டளையின் தலைவராக ஜி.கே.மணி உள்ளார். செயலாளராக அன்புமணி ராமதாஸ் இருக்கிறார். ஜெ.குரு அறங்காவலராக இருந்தார். மருத்துவர்கள் ரா. கோவிந்தசாமி, ப. சுந்தர்ராஜன், முனைவர் ச.சிவப்பிரகாசம் ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர். இவர்களைத் தவிர வேறு யாரும் அறக்கட்டளை நிர்வாகத்தில் தலையிட முடியாது. எனது மனைவிக்கு வன்னியர் அறக்கட்டளையுடன் எந்த தொடர்பும் இல்லை.

அறக்கட்டளை சார்பில் கல்லூரிகள் கட்டப்பட்ட போது,  ஏழைக்குழந்தைகள் பயிலும் கல்விக் கோயிலாக அது அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இரவு பகல் பாராமல் சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையிலும் கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைத்த தியாகத்துக்கு சொந்தக்காரர் அவர். தியாகங்களுக்கு விலை கேட்கும் வழக்கம் அவருக்கு கிடையாது. அறக்கட்டளை தொடங்கப்படும் போதே நான் வெளிப்படையாக ஓர் அறிவிப்பு செய்தேன்.

வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது உலகம் முழுவதும் உள்ள வன்னியர்களுக்கு சொந்தமானது. நன்கொடை செலுத்தாமல் அனைவரும் கல்வி கற்கலாம் என்று நான் அறிவித்தேன். அதன்படி கடந்த 12 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கல்விக் கோயிலில் கல்வி பெற்றுச் செல்கின்றனர். ஸ்டாலின் விரும்பினால், அவரது குடும்ப குழந்தைகளைக் கூட தகுதி அடிப்படையில் கல்விக் கோயிலில் சேர்க்கலாம்; எந்தவிதமான நன்கொடையுமின்றி கல்வி பயிலலாம். அதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

வன்னியர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகம் ஒரு திறந்த புத்தகம். ஸ்டாலின் விரும்பினால் அவரது கட்சியில் உள்ள தலை சிறந்த வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்களைக் கொண்டு ஓர் ஆய்வுக்குழுவை அமைக்கட்டும். அந்தக் குழு வன்னியர் கல்வி அறக்கட்டளையின் ஆவணங்களை ஆய்வு செய்யட்டும். அவர் கூறியவாறு ஏதேனும் ஒரு சொத்து, அவ்வளவு ஏன்.... வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான 10 பைசா மதிப்புள்ள குண்டூசியை என் மனைவி பயன்படுத்துவதாக ஸ்டாலின் அனுப்பும் குழு கண்டுபிடித்தால் கூட, நான் பொதுவாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகளை நான் எனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால் அரசியலிலிருந்தும், பொதுவாழ்க்கையிலிருந்தும் ஸ்டாலின் விலகத் தயாரா?

ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் வன்னியர் கல்வி அறக்கட்டளையில் ஆய்வு செய்ய நான் அனுமதிப்பதைப் போன்று திமுக அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை ஆகியவற்றை பா.ம.கவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய அனுமதிக்க ஸ்டாலின் தயாரா?

வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகள் அனைத்தும் முறைப்படி வாங்கப்பட்டவை. அதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்ளலாம். மாறாக, பல மாவட்டங்களில் திமுக அறக்கட்டளைக்காக சேர்க்கப்பட்டுள்ள சொத்துகள் வளைக்கப்பட்டவை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். அவற்றை ஆய்வு செய்ய ஸ்டாலின் அனுமதிப்பாரா?

திருச்செந்தூர், தென்காசி, குற்றாலம், விருத்தாசலம், சிதம்பரம், சென்னை ஆகிய இடங்களிலுள்ள வன்னியர் சொத்துகளும் எனது மனைவி பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் உளறி  உள்ளார். வாய்ப்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என வாயில் வந்ததை எல்லாம் உளறுவது 70 ஆண்டு கட்சியின் தலைவருக்கு அழகல்ல.

ஸ்டாலின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமின்றி இன்னும் ஏராளமான இடங்களிலும் வன்னியர்களுக்கு சொத்துகள் உள்ளன. அவை அனைத்தையும் ஆங்காங்கே உள்ள சமுதாயப் பெரியவர்கள் முறையான அமைப்பை வைத்து நிர்வகித்து வருகின்றனர். இத்தகைய உண்மைகளை திமுகவில் உள்ள துரைமுருகன் போன்ற விஷயம் தெரிந்த வன்னிய தலைவர்களிடம் கேட்டு அதன்பிறகு ஸ்டாலின் பேசியிருந்தால் இப்படியெல்லாம் அவமானப்பட வேண்டியிருக்காது.

ஸ்டாலினுக்கு அரசியலும் புரியாது; சமூகம் குறித்தும் தெரியாது. திமுகவின் தலைவராகிவிட்ட பிறகும், தன்னை ஒரு குழுவின் தலைவராகவே நினைத்துக் கொண்டு அரசியல் செய்து வருபவர். மக்களவைத் தேர்தல் தொடர்பாக அவர் கட்டி வைத்த கோட்டைகள் அனைத்தும் தகர்ந்து விட்டதால், ஆசை வெட்கம் அறியாது; ஆத்திரம் நேர்மை அறியாது என்பதைப் போல பாமக மீது உள்ள கோபம் காரணமாக எனது மீதும், எனது குடும்பத்தினர் மீதும் புழுதி வாரி தூற்றியிருக்கிறார்.

வன்னிய மக்களுக்காகவும், பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும் 40 ஆண்டுகளாக நான் போராடி, தியாகங்களை செய்து, சிறை சென்று இட ஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளேன். என்னுடன் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று இழப்புகளை சந்தித்துள்ளனர். இன்மும் சமூகநீதிக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இனியும் இறுதி மூச்சு வரை போராடுவேன். அந்த நம்பிக்கையில் தான் சமூக நீதி பெற்ற மக்கள் என்னை இன்னும் நம்புகின்றனர்; நேசிக்கின்றனர்.

ஆனால், இதுபற்றியெல்லாம் பேச ஸ்டாலின் யார்? அவருக்கும் வன்னியர்களுக்கும் என்ன தொடர்பு?  குறைந்தபட்சம் திமுகவில் உள்ள வன்னியர்களுக்காவது அவர் ஏதேனும் செய்திருப்பாரா? வடமாவட்ட வன்னியர்களால் உயிர் பெற்ற திமுகவின் தலைவராக இருந்து கொண்டு, திமுகவில் உள்ள வன்னியர்களையே அவமானப்படுத்தி அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள ஸ்டாலினுக்கு இதுபற்றியெல்லாம் பேச தகுதியில்லை.

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததைப் போன்று, உடம்பு முழுவதும் வன்னியர் எதிர்ப்பு ரத்தம் ஓடும் ஸ்டாலினுக்கு திடீரென வன்னியர்கள் மீது பாசம் பொங்குகிறது. ஸ்டாலினிடமிருந்து வெளிப்படும் பாசம் என்பது நாகப்பாம்பின் நஞ்சை விட கொடூரமானது என்பதை திமுகவில் அவரால் பழிவாங்கப்பட்ட வன்னியர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த வன்னிய சமுதாயமும் அறியும். இத்தகைய நீலிக்கண்ணீர் வடிப்பு நாடகங்கள் மூலம் பாட்டாளி மக்களிடம் உள்ள பாமக பாசத்தை சுரண்டிக்கூட பார்க்க முடியாது.

இப்போது வன்னியர் கல்வி அறக்கட்டளைக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் மு.க.ஸ்டாலினும், அவர் சார்ந்த அரசியல் கட்சியும் 2006-11 ஆட்சிக்காலத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளையை முடக்க  மேற்கொண்ட சதிகள் கொஞ்ச நஞ்சமல்ல. பாமக ஆதரவில் தான் மைனாரிட்டி திமுக அரசு செயல்பட்டது என்றாலும் அதை மறந்து விட்டு, அறக்கட்டளைக்கு பல்வேறு தொல்லைகளைக் கொடுத்தனர்.

வன்னியர் கல்வி அறக்கட்டளைக்காக அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக ஆற்காடு வீராசாமி மூலம் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் திமுக அவதூறு பரப்பியது; ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்தது. அதற்கு பதிலளித்த நான், "ஓர் அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை; அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் தாராளமாக கையகப்படுத்திக் கொள்ளலாம்” என்று சவால் விடுத்தேன். சட்டப்பேரவையில் இதுகுறித்த விவாதத்திற்கு பதிலளித்த பாமக தலைவர் ஜி.கே.மணியும் இதே அறைகூவலை முன்வைத்தார். அதைக்கேட்டதும் திமுக அரசு எந்த பதிலும் பேசாமல் இந்த விஷயத்தைக் கைவிட்டது. இது தான் திமுகவின் வீரம் ஆகும்.

வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் சட்டக்கல்லூரி தொடங்க உலகத்தரம் கொண்ட கட்டமைப்பு வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டது. தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன், தேவைக்கும் அதிகமாகவே சட்ட நூல்களும் வாங்கப்பட்டன. ஆனால், பாமகவின் ஆதரவில் செயல்பட்டாலும் இந்த சட்டக்கல்லூரிக்கு திமுக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரிக்கு அனுமதி வழங்கும் படி மொத்தம் 3 முறை திமுக அரசுக்கு ஆணையிட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதியும் அனுமதி வழங்க வாய்மொழியாக உத்தரவிட்டார்.

ஆனால், அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலினும், அவரது துதிபாடிகள் கூட்டமும் சேர்ந்து கொண்டு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தனர். 

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் சட்டக்கல்வி பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டக்கல்லூரியை தொடங்கவிடாமல் தடுத்த ஸ்டாலின் தான் இப்போது வன்னிய மக்களுக்காக நீலிக்கண்னீர் வடிக்கிறார். திமுகவின் தூண்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், மதுராந்தகம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி ராமச்சந்திரன், ஏ.ஜி. சம்பத் உள்ளிட்ட வன்னிய சமுதாய தலைவர்கள் ஸ்டாலின் மற்றும் அவரது துதிபாடிகளால் எப்படியெல்லாம் அவமதிக்கப்பட்டார்கள்; எப்படி எல்லாம் குமுறினார்கள் என்ற வரலாறு திமுகவில் உள்ள வன்னியர்களுக்கு தெரியும்.

இப்போதும் திமுகவில் உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வீரபாண்டி ராஜா ஆகியோர் தொடர்ந்து அவமதிக்கப்படும் போதிலும், அவற்றை சகித்துக் கொண்டிருக்கின்றனர், திமுக பொருளாளர் துரைமுருகன் இப்போதும் எப்படி முதுகில் குத்தப்பட்டார்? என்பவை எல்லாம் ஊரறிந்த வரலாறு.

திமுகவில் உள்ள வன்னியர்களாக இருந்தாலும், பொதுவான வன்னியர்களாக இருந்தாலும் சிங்கங்களைத் தான் மதிப்பார்கள். சிறு நரிகளின் கதறல்களை கண்டு கொள்ள மாட்டார்கள். இன்னும் 15 நாட்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் திமுகவுக்கு அவர்கள் பாடம் புகட்டுவார்கள்; அனைத்து தொகுதிகளிலும் வீழ்த்துவார்கள். இது உறுதி" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x