Last Updated : 01 Apr, 2019 05:44 AM

 

Published : 01 Apr 2019 05:44 AM
Last Updated : 01 Apr 2019 05:44 AM

பிளாஸ்டிக் கொடிகள் இல்லாத முதல் தேர்தல்: 50 ஆயிரம் பேர் வேலையிழப்பு; 200 நிறுவனங்கள் மூடல்

தமிழகத்தில் பிளாஸ்டிக் கொடிகள் இல்லாத முதல் தேர்தல் இத்தேர்தல்தான். இதனால், கட்சிகளின் பிளாஸ்டிக் கொடிகள் தயாரித்த 200 நிறுவனங்கள் மூடப்பட்டு, சுமார் 50 ஆயிரம் பேர் வேலைஇழந்துள்ளனர்.

கடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களின்போது சுவரொட்டி, சுவர் விளம்பரம், பிளாஸ்டிக் கொடி தோரணங்கள் முக்கியப் பங்கு வகித்தன. உயர் நீதிமன்றஉத்தரவையடுத்து பொது இடங்களில் தேர்தல் சுவரொட்டி ஒட்டுவதில்லை. அதேபோல் சுவர் விளம்பரமும் செய்யப்படுவதில்லை.

மக்களுக்கு பறைசாற்றும்

கடந்த தேர்தல்களில் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் கட்சியின் பிளாஸ்டிக் கொடிகள் தோரணங்களாக அப்பகுதி முழுவதும் தொங்கவிடப்பட்டன. அதுபோல தெருக்களில் வேட்பாளர் பிரச்சாரம் செய்யும்போதும் பிளாஸ்டிக் கொடிகள் தோரணமாக தொங்கவிடப்பட்டன. இந்த பிளாஸ்டிக் கொடி தோரணம்தான், குறிப்பிட்ட இடத்தில் எந்தக் கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு பறைசாற்றும். இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசுதடை விதித்திருப்பதால் பிளாஸ்டிக் கட்சிக் கொடிகள் இல்லாத முதல் தேர்தலாக இத்தேர்தல் அமைந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் எஸ்.ராக்கப்பன் கூறியதாவது:

கடந்த ஜனவரி 1-ம் தேதியில்இருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் பிளாஸ்டிக் கொடிகளும் அடங்கும். வழக்கமாக ‘கேரி பேக்’ தயாரிக்கும் நிறுவனங்கள்தான், தேர்தல் நேரத்தில் முழுவீச்சில் அரசியல் கட்சிகளின் பிளாஸ்டிக் கொடிகளைத் தயாரிக்கும். பிளாஸ்டிக் கொடிகள் தயாரிப்பில் சிவகாசி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் 200 நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. அவற்றை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் பேர் ஈடுபட்டிருந்தனர். இப்போது இந்த நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதால், 50 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.

ஆர்டர் கொடுக்கவில்லை

தேர்தல் நேரத்தில் சுமார் 2 ஆயிரம் டன் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி கட்சிக் கொடிகள் தயாரிக்கப்படும். இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி. பிளாஸ்டிக் தடை காரணமாக இந்தத் தேர்தலில் எந்த கட்சியும் பிளாஸ்டிக் கொடிக்கு ஆர்டர் கொடுக்கவில்லை. நாங்களும் தயாரிக்கவில்லை.

இவ்வாறு ராக்கப்பன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x