Last Updated : 19 Apr, 2019 09:19 PM

 

Published : 19 Apr 2019 09:19 PM
Last Updated : 19 Apr 2019 09:19 PM

சேலத்தில் வெறி நாய் கடித்ததில் 70 பேர் படுகாயம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதி

சேலத்தில் நேற்று காலை தெரு நாய் வெறி பிடித்த நிலையில் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்து குதறியது. இதில் 70 பேர் பலத்த காயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  ஒவ்வொரு தெருக்களிலும் பத்து நாய்களுக்கு மேல் உலாவி வருகிறது. இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் விரட்டி கடித்து வருகிறது. சேலம் மாநகராட்சியில் மாதம் தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாய் கடிக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட  அன்னதானப்பட்டி, களரம்பட்டி, கிச்சிபாளையம், நாராயணநகர், குறிஞ்சி நகர் வீட்டு வசதி வாரிய குடியிரு்பபு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை வெறி பிடித்த தெரு நாய் சுற்றியுள்ளது. வெறி பிடித்த நாய், அப்பகுதியை சேர்ந்த மக்களை விரட்டி விரட்டி கடித்து குதறியது. இந்த வெறி நாய் ஒவ்வொரு பகுதியாக ஓட்டம் பிடித்த படி, வழியில் சென்றவர்களை எல்லாம் கடித்து வைத்தது.

நாய் கடிபட்டவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட  சேலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.  நேற்று ஒரே நாளில் மட்டும் வெறி நாய்  கடித்ததில்  70 பேர் பலத்த காயம் அடைந்தனர்.  அனைவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதியாகினர். இதில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொடுங் காயம் அடைந்து தீவிர சிகிச்சைக்கு அனுமதியாகியுள்ளனர்.

பொது மக்களை விரட்டி விரட்டி கடித்த நாயை பிடிக்க, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மாநகராட்சி நாய் பிடிக்கும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வராததால், வெறி நாய் கடிக்கு பயந்து பொதுமக்கள் வெளியில் நடமாடாமல் வீட்டுக்குள் முடங்கினர். சேலம் பச்சப்பட்டியில் உள்ள சிறுவர்கள் உள்பட பலரையும் மீண்டும் வெறி நாய் கடித்தது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி இளைஞர்கள், நாயை துரத்தி பிடித்து அடித்து  கொன்றனர். சேலம் நாராயண நகர் அருகே உள்ள சத்தியமுர்த்தி தெருவில் சுற்றிய வெறி நாயை அடித்து கொன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த, மாநகராட்சி நாய் பிடிக்கும் வாகனத்தை மக்கள் சூழ்ந்தனர். நாய் பிடிக்கும் ஊழியர்களை சிறைபிடித்து, நாய் தொல்லையால் தினமும் மக்கள் படும் துயரையும், நாய் பிடித்து ஒழிக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகளை ஏக வசனத்தில் சாடினர். அதன் பின்னர், மாநகராட்சி ஊழியர்கள், இறந்து கிடந்த வெறி நாயை வாகனத்தில் எடுத்து கொண்டு, அங்கிருந்து சென்றனர். நேற்று காலை முதல் மதியம் வரை ஒற்றை வெறிநாய் ஊர் மக்களை கடித்து அச்சுறுத்தி பீதியடைய வைத்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நாயை பிடிக்க நடவடிக்கை தேவை:

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, ‘‘அதிகாலை முதல் பொது மக்களை கடித்து வரும் நாயை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் அதிக அளவில் நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. அடிக்கடி  சிறுவர்கள் நாய் கடித்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலைகளில் சுற்றி திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனவிருத்தி கட்டுப்படுத்த மட்டுமே முடியும்:

இதுகுறித்து மாநகராட்சி நல அலுவலர் மருத்துவர் பார்த்திபன் கூறியதாவது:

சேலம் மாநகராட்சி பகுதியில் வெறி நாய் கடித்ததில் பலரும் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் நாயை பிடித்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கடந்த ஆறு மாதத்தில் 300 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். நாயை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சென்று விடவும், நாயை ஒழிக்கவும் விலங்குகள் நல வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தெரு நாய்கள் தேவையில்லாத சாலையோர உணவு கழிவுகளை உட்கொள்வதால், இதுபோன்று வெறி பிடிக்க காரணமாக உள்ளது. சேலம் மாநகராட்சி மூலம் நாய் இன விருத்தியை கட்டுப்படுத்த மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாய் கடிக்கு உள்ளாகியவர்களுக்கு தேவையான நாய் கடி மருந்து இருப்பு உள்ளதால், சிகிச்சை அளிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

சேலம் அரசு மருத்துவமனையில் சுற்றி திரியும் 20 நாய் கூட்டம்

 

சேலம் அரசு பொது மருத்துவமனையில் 20 நாய்கள் வரை சுற்றி திரிந்து வருகிறது. இங்கு வரும் நோயாளிகள் போடும் திண்பண்டங்களையும், கேன்டீன்களில் இருந்து போடும் மிச்சம் மீதி பொருட்களை உண்டு, நாய்கள் அரசு மருத்துவமனைக்குள் உறைவிடமாக்கி கொண்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ஊழியர்கள் பல முறை முறையிட்டும், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.  செவிலியர்களும், ஊழியர்களும் அரசு மருத்துவமனையில் சுற்றி திரியும் நாய்களை கண்டு அஞ்சும் நிலை நீடிக்கிறதாக புகார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x