Last Updated : 08 Apr, 2019 12:00 AM

 

Published : 08 Apr 2019 12:00 AM
Last Updated : 08 Apr 2019 12:00 AM

தேர்தலில் அமுங்கிப்போன ‘விலைவாசி உயர்வு’ கோஷம்

பொதுவாக ஒவ்வொரு தேர்த லிலும் பிரச்சாரங்களில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் ‘விலைவாசி உயர்வு’ கோஷம் இந்த மக்களவைத் தேர்தலில் ‘பேசா பொருளா’கி விட்டது.

மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டப் பேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்படும். அதில் முக்கிய இடம் பிடிப்பது அப்போதைய ‘விலை வாசி உயர்வு’ தான். ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரம் விலைவாசி உயர்வாகவே இருக்கும். தங்களது ஆட்சிக் காலத்தில் அத்திவாசியப் பொருட்கள் என்ன விலையில் விற்றது..? அடுத்து நடப்பு ஆட்சியில் என்ன விலையில் விற்கப்படுகிறது என்பதையும் பட்டியல் போட்டு பிரச்சாரக் கூட்டங்களில் பேச்சாளர்கள் வெளுத்து வாங்குவர். மற்ற மாநிலங்களில் அத்தியவாசியப் பொருட்களின் விலைப்பட்டியலும் தவறாமல் வாசிக்கப்படும். ஆனால், தமிழகத்தில் ஏப். 18-ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் விலைவாசி உயர்வு பேசா பொருளாகவே ஆகி விட்டது. அதற்குப் பதிலாக மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பற்றியே எதிர்க்கட்சிகள் அதிகளவில் பிரச்சாரம் செய்கின்றன.

விலைவாசி உயர்வு பற்றி எதிர்க்கட்சிகள் அவ்வளவாகப் பேசுவதில்லை. அதோடு எல்லா தேர்தலிலும் பேசப்படும் கச்சத்தீவு, மதுவிலக்கு, முல்லை பெரியாறு, காவிரி, ஏழு பேர் விடுதலை விவகாரங்கள் இந்த தேர்தலில் அடக்கி வாசிக்கப்படுகின்றன. சில இடங்களில் எதிர்க் கட்சியினர் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி பேசுகின்றனர். வீட்டு உபயோக சிலிண்டருக்கு வங்கியில் மானியம் வழங்குவதை குறிப்பிட்டு விலை உயரவில்லை என்றும், கடந்த ஆண்டை விட பெட்ரோல், டீசல் விலை குறைந்திருப்பதாக பாஜகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.

விலைவாசி உயர்வு உட்பட தேர்தலுக்கு தேர்தல் பேசப்படும் தமிழகத்துக்கே உரிய பல வழக்கமான பிரச்சினைகளைப் பேச மறுக்கும் எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி ஆகியோரை இலக்காக வைத்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கோடநாடு கொலை, பொள்ளாட்சி பாலியல் சம்பவங்களை விலாவாரியாக விளக்கியும் பிரச்சாரம் செய்கி ன்றன. இது குறித்து பாஜகவினர் கூறுகையில், ஜிஎஸ்டி வரி விதிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனாலேயே எதிர்க்கட்சிகளால் விலைவாசி உயர்வு பற்றி பேச முடியவில்லை. பாஜக ஆட்சியில் ஊழல் பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லாத நிலையில், பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி எதிர்க்கட்சியினர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கின்றனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x