Published : 13 Apr 2019 10:02 PM
Last Updated : 13 Apr 2019 10:02 PM

சென்னை காவல் ஆணையர் உட்பட 14  போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்: தேர்தல் பணி டிஜிபியிடம் திமுக மனு

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள், ஆளுங்கட்சி வழிகாட்டுதலில் செயல்படுகிறார்கள் ஆகவே சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 14 போலீஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் பணிகளுக்கான டிஜிபியிடம் திமுக புகார் அளித்துள்ளது.

தேர்தல் பணிகளுக்கான டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு ஒன்று அளித்தார். அதில், கூறியிருப்பதாவது:

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி 10 போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடந்த 2-ம் தேதி புகார் மனு அளித்தோம்.

ஆனால், இதுவரை அவர்கள் மாற்றப்படவில்லை. தற்போது தேர்தல் ஆணையக்கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளது. ஆனால் அவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், ஆளுங்கட்சியின் சொற்படி நடக்கிறார்கள்.

கீழ்கண்ட அலுவலர்கள் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அளிக்கும் எந்த புகாரையும் ஏற்பதில்லை, மதிப்பதில்லை. தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களை அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில்லை மாறாக அவர்கள் சட்டமீறலுக்கு உறுதுணையாக உள்ளனர்.

எனவே நேர்மையாகவும் நியாயகமாகவும் தேர்தல் நடைபெற கீழ்கண்ட அதிகாரிகளை தேர்தல் பணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டுகோள் வைக்கிறோம்.

என தெரிவித்து கீழ்கண்ட அதிகாரிகளை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

  1. தமிழக சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி விஜயகுமார்,
  2. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,
  3. சென்னை கூடுதல் காவல் ஆணையர்கள் ஏ.அருண் (போக்குவரத்து),
  4. ஆர்.தினகரன் (வட சென்னை),
  5.  மகேஷ் குமார் அகர்வால் (தென் சென்னை),
  6.  இணை ஆணையர்கள் அன்பு (மத்திய குற்றப்பிரிவு),
  7. பிரேம் ஆனந்த் சின்ஹா,
  8. எம்.வி.ஜெயகவுரி,
  9. மகேஷ்வரி
  10. ஆர்.சுதாகர்,
  11. நஜ்மல்ஹோடா,
  12. எஸ்.ராஜேந்திரன் (கீழ்பாக்கம்),
  13. மயில்வாகனன் (மயிலாப்பூர்),
  14. திருமங்கலம் உதவி ஆணையர் சிவகுமார்

ஆகிய 14 பேரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும். தேர்தல் பணியிலிருந்து இவர்களை விலக்கி வைக்க வேண்டும். இல்லை என்றால் இந்த தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறாது.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x