Published : 15 Apr 2019 07:32 PM
Last Updated : 15 Apr 2019 07:32 PM

திமுக அலுவலகம், சார்பு தொலைக்காட்சி அலுவலகங்களில் பணம் பதுக்கல்:  அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்

திமுக அலுவலகம், அது சார்ந்த தொலைக்காட்சி அலுவலகங்களில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும், அதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாபு முருகவேல் தமிழக தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ள புகார்:

''நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஆங்காங்கே திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிளும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.

அதை காவல்துறை நல்ல முறையில் கையாண்டு வருகிறது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறலாம் என்ற நோக்கத்தோடு தேர்தல் அலுவலர்கள் கவனத்தையும், காவல்துறையின் கவனத்தையும் திசை திருப்பும் நோக்கத்தோடு திமுக சார்பில் பொய்யான புகார்கள் அதிமுக மீது கொடுத்து வருகின்றனர்.

ஆனால், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க ஏதுவாக திமுகவினர் அவர்கள் சார்ந்த 2 தொலைக்காட்சி அலுவலகங்கள், அனைத்து மாவட்டங்களில் உள்ள திமுகவின் கட்சித் தலைமை அலுவலகங்கள் மற்றும் திமுக வேட்பாளர்களின் முகவர்கள் சொந்தமான இடங்களில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளனர்.

மேலும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஓட்டுக்குப் பணம் கொடுக்க முடிவு செய்துள்ளனர். எனவே தலைமைத் தேர்தல் அதிகாரி உடனடியாக காவல் துறையை துரிதப்படுத்தி மேற்கூறிய இடங்களில் சோதனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கைப்பற்றி திமுக வேட்பாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

இவ்வளவு இடத்தில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளீர்கள். இதை எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?

உறுதியாக சொல்லக் காரணம் முதலில் எங்களுக்குத்தான் தகவல் வரும். பின்னர்தான் போலீஸுக்குப் போகும். ஆகவே யாரிடம் இதுபோன்ற செய்திகளைச் சொன்னால் அது செய்தியாகும், உடனடி நடவடிக்கை வரும் என்பதால் எங்களுக்கு முக்கியமான சோர்ஸ் தகவல் கொடுக்கிறார்கள்.

இரண்டு முக்கியத் தொலைக்காட்சி அலுவலகத்தில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். அது கவனத்தை ஈர்க்க கொடுக்கும் புகாரா?

அது உண்மையான தகவல்தான். கவனத்தை ஈர்க்க கொடுக்கப்பட்ட புகார் அல்ல. இதுவரை 30 புகார்கள் கொடுத்துள்ளேன். எதுவுமே ஆதாரம் இல்லாமல் கொடுத்ததில்லை.

3 நாட்கள் பணப் பட்டுவாடா என்கிறீர்கள். தடுக்க என்ன ஏற்பாடு செய்துள்ளீர்கள்?

தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். நாம் புகார் மட்டுமே அளிக்க முடியும்.

இதற்கு முன்னர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற நம்பிக்கையில்தான் கொடுக்கிறோம். தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவேண்டும். அப்படி இல்லாவிட்டால் சட்டபூர்வமாக அடுத்தகட்ட வேலையைச் செய்வோம்.

நாங்கள் கொடுத்த புகாரால்தான் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடந்தது. ஆதாரமில்லாமல் எந்தப் புகாரையும் நாங்கள் கொடுக்க மாட்டோம்.

இவ்வாறு பாபு முருகவேல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x