

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்த திருவண்ணாமலை ராணுவ வீரரின் உடலை இன்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
திருவண்ணாமலை பவித்ரம் கிராமத்தில் கரியான் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ராயர். அரசுப் போக்கு வரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ரஞ்சித் (25). கடந்த 2010-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தவர் ஸ்ரீநகர் குப்வாரா பகுதியில் 41 ஆர்.ஆர்.பட்டாலியன் படைப் பிரிவில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்தார்.
இந்நிலையில், குப்வாரா மலைப் பிரதேசத்தில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த சண்டையின்போது, ரஞ்சித் சென்ற வாகனம் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி உள்ளது. இதில் ரஞ்சித் உட்பட சிலர் இறந்தனர். இந்த தகவல் ரஞ்சித்தின் பெற்றோருக்கு செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப் பட்டது.
ரஞ்சித்தின் உடல் புதன்கிழமை சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அவரது உடல் சென்னை வந்து சேருவதில் சற்று தாமதம் ஏற்பட்டதால் இன்று (வியாழக் கிழமை) கொண்டுவரப்படுகிறது. ராயரின் சொந்த ஊரான வெறையூர் அடுத்த சு.கம்பம்பட்டு கிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ரஞ்சித் உடல் வைக்கப்படுகிறது.
பின்னர், அங்குள்ள மயானத்தில் ராணுவ மரியாதையுடன் ரஞ்சித்தின் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.