மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை: நாம் தமிழர் கட்சி புகார்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை: நாம் தமிழர் கட்சி புகார்
Updated on
1 min read

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் அளவு குறைவாகவும், தெளிவில்லாமல் இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சி புதுச்சேரியில் புகார் தெரிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநிலச் செயலர் சிவக்குமார், தொழிலாளர் நலச்சங்க மாநிலச் செயலர் ரமேஷ் ஆகியோர் மக்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று  மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

''மக்களவைத் தேர்தலிலும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. தமிழகம், புதுச்சேரியில் எங்கள் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் தரப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர் புகைப்படம், கட்சி சின்னம் பொருத்தும் பணி நடைபெறுகிறது.

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களின் அளவை விட நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் சிறியதாகவும், தெளிவாக இல்லாமலும் உள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் மீதும் தேர்தலின் மீதும் நம்பிக்கை வைத்து வாக்கினைச் செலுத்தி வரும் வாக்காளர்களின் சிந்தனையையும், மனோநிலையையும் சீர்குலைக்கும் விதமாக தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை வடிவமைத்து இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல்.

இதர மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களைப் போன்று தெளிவாக நாம தமிழர் கட்சியின் சின்னத்தையும் தெளிவாக பொருத்திட வேண்டும். சரியான விளக்கத்தையும் தர வேண்டும்".

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in