Published : 10 Apr 2019 10:45 AM
Last Updated : 10 Apr 2019 10:45 AM

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்காவிட்டால், உடலை ஏந்தி கடற்கரையில் வைக்க முடிவு செய்திருந்தேன்: ஸ்டாலின்

மறைந்த தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்திருக்காவிட்டால், அவரது உடலை ஏந்தி நாமே கடற்கரையில் சென்று வைக்க வேண்டும் என முடிவு செய்திருந்ததாக, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தென்காசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம்:

"மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 என்று எப்படி முழங்குகின்றோமோ அதேபோல், இடைத்தேர்தலில் 22-க்கு 22 நாம் தான் வெற்றிபெறப் போகின்றோம் அதில் எந்த மாற்றமும் கிடையாது.

பிரதமர் மோடி மக்களிடம் சென்று வேஷம் போடுகிறார். மக்களிடம் சென்று பரிதாபத்தை தேட முயற்சிக்கின்றார். மக்களிடம் சென்று இரக்கத்தை தேடுகின்ற முயற்சியில் இப்பொழுது ஈடுபடுகின்றார்.

இந்த ஏழைத் தாயின் மகன் பணக்காரர்களுக்கு மட்டுமே ஆட்சியை நடத்தி இருக்கிறார். இந்த ஏழைத் தாயின் மகன் 10 லட்சம் ரூபாய்க்கு கோட் போடுகின்றார். இந்த ஏழைத் தாயின் மகன் விதவிதமாக கலர் கலராக தொப்பி அணிகிறார். இந்த ஏழைத் தாயின் மகன் சிலிண்டர் விலையை ஏற்றி விட்டார். இந்த ஏழைத் தாயின் மகன் மோடி அவர்கள் பெட்ரோல் விலையை, டீசல் விலையை உயர்த்திக் காட்டியிருக்கிறார்.

இந்த ஏழைத் தாயின் மகன் விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருந்திருக்கிறார். இந்த ஏழைத்தாயின் மகனுடைய ஆட்சியில் தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போயிருக்கிறார்கள். இந்த ஏழைத் தாயின் மகன் ஆட்சியில் தான் விவசாயிகள் டெல்லி தலைநகரத்திற்குச் சென்று நிர்வாண போராட்டம் நடத்தி இந்த நாட்டிற்கு அவமானத்தை தேடி தந்திருக்கின்றார்கள். மோடி உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இதைச் சொல்வதற்கு? இந்தக் கேள்வியைத் தான் நான் கேட்கின்றேன்.

மோடியைப் பார்த்து எத்தனை பேர் பயந்து ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். பெரிய பெரிய அதிகாரிகள். எத்தனை பேர் அதனைக் கண்டித்து வெளிப்படையாக அறிக்கையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வருக்கு மூளையே கிடையாது என்று சொன்னவர் அன்புமணி ராமதாஸ். இவரெல்லாம் ஒரு முதல்வர் என சொன்னது யார், அன்புமணி ராமதாஸ். எவ்வளவு கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தி பேசினீர்கள். இன்றைக்கு கூட்டணியில் இருக்கின்றீர்கள். ஏதோ ஒரு செட்டில்மென்ட் பரவாயில்லை.

தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்த போது என் காதில் தேன் பாய்ந்தது, அவர்களுக்கு தேள் பாய்ந்தது. நீதிமன்றத்திலிருந்து தீர்ப்பு வரவில்லை என்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தால். நினைத்துப் பார்க்கின்றேன், எல்லாத் தோழர்களையும் ஒன்று சேர்த்து நம் தலைவரின் உடலை நாமே ஏந்தி, அதே கடற்கரையில் கொண்டு போய் வைக்க வேண்டும் என்ற முடிவோடு தான் நான் இருந்தேன். நம் தலைவர் கலைஞருக்கு இடம் தர மறுத்த இந்த துரோகி கூட்டத்திற்கு, நாம் பாடம் புகட்ட வேண்டும் என்று சொன்னால் அவர் அண்ணாவுக்கு தந்த அந்த உறுதிமொழியை, நாம் இருந்து காப்பாற்றி இருக்கின்றோம்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x