

மக்களவை, சட்டப்பேரவைத் தேர் தலையொட்டி ஆந்திர எம்எல்ஏக் கள் அவரவர் பகுதி பாசனத்துக்காக கிருஷ்ணா நதி நீரைத் திறந்துவிட நெருக்கடி கொடுப்பதால், சென் னைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவே (0.379 ஆயிரம் மில்லியன் கனஅடி) கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்துள்ளது.
சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 2 தடவையாக 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கண்டலேறு அணை மட்டுமல்லாமல் அதற்கு மேல் உள்ள சோமசீலா, ஸ்ரீசைலம் அணைகளிலும் குறைவான அளவே நீர் இருப்பு உள்ளது.
கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதி நீர் சுமார் 150 கிலோமீட்டர் ஓடிவந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியை வந்தடையும். இந்த இடைப்பட்ட பகுதிகளில் கிருஷ்ணா நீரைக் கொண்டு லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தண்ணீரைப் பொருத்தவரை முதலில் குடிநீருக்கும், பிறகு பாசனத்துக்கும் வழங்க வேண்டும் என்பது நடைமுறை. அதன்படி, கடந்த ஆண்டுகளில் கிருஷ்ணா நீரை பாசனத்துக்கு விவசாயிகள் எடுப்பதை ஆந்திர மாநில பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் தடுத்தனர். அதனால், பூண்டி ஏரிக்கு போதுமான அளவு கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்தது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவான அளவே (0.379 ஆயிரம் மில்லியன் கனஅடி) தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழக பொதுப் பணித் துறை உயர் அதிகாரி கூறியதாவது:
ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் கிருஷ்ணா நீர் வாய்க்காலையொட்டி அமைந் துள்ள பகுதிகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் பலர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். உள்ளூர் எம்எல்ஏக்கள் கொடுத்த நெருக்கடியால் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் கிருஷ்ணா நீர் வாய்க் கால்களில் உள்ள மதகுகளை எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் திறந்துவிட்டு பாசனத்துக்கு கணிச மான அளவு தண்ணீரை எடுத்து விட்டனர். அதனால் சென்னைக்கு தேவையான அளவு கிருஷ்ணா நீர் வந்துசேரவில்லை.
சென்னை குடிநீருக்காக ஜன வரி முதல் ஏப்ரல் வரை 8 டிஎம்சி (8 ஆயிரம் மில்லியன் கனஅடி) கிருஷ்ணா நீர் திறந்துவிட வேண் டும். இந்த ஆண்டு பல முறை கோரிக்கை விடுத்ததுடன், பொதுப் பணித் துறை செயலாளரும் நேரில் சென்று வலியுறுத்தினார். அதனால்தான், கடந்த பிப்.11-ல் கிருஷ்ணா நீர் சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்டது. மார்ச் 3 வரை மட்டுமே தண்ணீர் வந்தது. விநாடிக்கு 100 கனஅடி முதல் அதிகபட்சம் விநாடிக்கு 450 கனஅடி கிருஷ்ணா நீர் வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை குடிநீர் வாரிய அதி காரி ஒருவர் கூறுகையில், ‘‘தற் போதைய நிலவரப்படி, ஆந்திரா வில் 215 டிஎம்சி. கொள்ளளவு கொண்ட ஸ்ரீசைலம் அணையில் 43 டிஎம்சி.யும், 73 டிஎம்சி. கொள்ளளவு கொண்ட சோமசீலா அணையில் 5 டிஎம்சி.யும், 68 டிஎம்சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 6 டிஎம்சி.யும் நீர் இருப்பு உள்ளது. அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருந்தாலும், எம்எல்ஏக்களின் நெருக்கடியால்தான் குறைந்தபட்ச அளவு தண்ணீர்கூட சென்னைக்கு வரவில்லை’’ என்றார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில், 200 மில்லியன் லிட்டர், கடல்நீரைக் குடிநீராக்கும் 2 நிலை யங்களில் இருந்தும், 180 மில்லி யன் லிட்டர் வீராணம் ஏரியில் இருந்தும், 30 மில்லியன் லிட்டர் கல்குவாரிகளில் இருந்தும், மீத முள்ள தண்ணீர் ஏரிகளில் இருந் தும் பெறப்படுகிறது. குடிநீர் தட்டுப் பாட்டைச் சமாளிக்க தினமும் 7 ஆயிரம் லாரி நடைகள் குடிநீர் எடுத்துச் செல்லப்பட்டு குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்படுகிறது. ஆங்காங்கே மக்களுக்கு நேரடி யாகவும் விநியோகிக்கப்படுகிறது.
மொத்தம் 11,257 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் தற்போது 673 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் 4,554 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.