Published : 16 Apr 2019 11:10 AM
Last Updated : 16 Apr 2019 11:10 AM

முத்து நகரில் மும்முர பிரச்சாரம்- வேட்பாளர்கள் இறுதிக்கட்ட விறுவிறுப்பு

தூத்துக்குடி மக்களவை தொகுதி யில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனும், திமுக கூட்டணியில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழியும் மோதுவதால் தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமமுக சார்பில் ம.புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.பி.எஸ். பொன் குமரன் என, இங்கு 37 வேட்பாளர்கள் களம்காணுகின்றனர். கடந்த 20 நாட்களாக வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர்.

தலைவர்கள் பிரச்சாரம்

தமிழிசைக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இல.கணேசன், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

கனிமொழிக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

அமமுக வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிறிஸ்டன்டனை ஆதரித்து கட்சி தலைவர் சீமான், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன் குமரனை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்துள்ளனர்.

இன்று (ஏப். 16) மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. எனவே அனைத்து வேட்பாளர்களும் இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இறுதிகட்ட பிரச்சாரம்

தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில்பட்டி பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை தூத்துக்குடி நகரில் இன்று மேற்கொள்கிறார். தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் தொடங்கி நகர் முழுவதும் சுற்றிவந்து மாலை 5 மணிக்கு அண்ணாநகர் 7-வது தெரு சந்திப்பில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

கனிமொழி நேற்று காலை தூத்துக்குடி மாநகரில் பெ.கீதா ஜீவன் எம்எல்ஏவுடன் சென்று வாக்கு சேகரித்தார்.

மாலையில் வாகைகுளம், செக்காரக்குடி, தெய்வசெயல்புரம் பகுதிகளில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவுடன் சென்று வாக்கு சேகரித்தார். இன்று தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை காலையில் திருச்செந்தூரில் தொடங்குகிறார். தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் செய்யும் அவர், மாலை 5 மணிக்கு கோவில்பட்டியில் நிறைவு செய்கிறார். கோவில்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசுகிறார்.

அமமுக வேட்பாளர் புவனேஸ் வரன் நேற்று காலை சேதுக்கு வாய்த்தான், அங்கமங்கலம், நாலு மாவடி, தென்திருப்பேரை உள் ளிட்ட பகுதிகளிலும், மாலையில் ஆழ்வார்திருநகரி, நாசரேத், பேய்க் குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார். இன்று தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மேற்கொள்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்குமரன் ஆகியோரும் நேற்று பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர் களும் இன்று தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தூத்துக்குடியில் நிறைவு செய்கின்றனர்.வேட்பாளர்கள் இறுதிக்கட்ட விறுவிறுப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x