

''எங்கள் கட்சிக்கு நாங்கள் பிரச்சாரம் செய்தால், அதை குடும்ப அரசியல் என்று சொல்கிறார்களே. இது நியாயமா?'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேமுக தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகபாண்டியன் சென்னையில் இன்று தன்னுடைய பிறந்த நாளை, கட்சியினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
''எங்களை குடும்ப அரசியல் என்று எப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய அண்ணன், எங்கள் கட்சிக்கு ஓட்டு கேட்காமல், திமுகவுக்கோ மற்ற கட்சிகளுக்கோ ஓட்டு கேட்பாரா? எங்கள் கட்சிக்குத்தானே ஓட்டு கேட்கவேண்டும். அதைத்தான் என்னுடைய அண்ணன் செய்கிறார்.
அப்பாவுடன் (விஜயகாந்த்) என் அம்மா, கட்சியிலும் பிரச்சாரத்திலும் நீண்டகாலம் இருந்தாலும் இப்போதுதான் அம்மாவுக்குக் கட்சியில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. என் மாமா ஏற்கெனவே, தேர்தலில் நின்றார். பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். நாங்கள் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் என்ன தவறு இருக்கிறது? இப்படிச் சொல்லுவது நியாயமா?
திமுக பெரிய கட்சி. அந்தக் கட்சியில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். கனிமொழி இருக்கிறார். இப்போது உதயநிதி ஸ்டாலினும் வந்துவிட்டார். ஆனால் நாங்கள் எங்கள் குடும்பமாகச் சேர்ந்து, மக்களுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் போராடி வருகிறோம். இதிலென்ன தவறு இருக்கிறது?''
இவ்வாறு சண்முகபாண்டியன் தெரிவித்தார்.