Published : 22 Apr 2019 03:50 PM
Last Updated : 22 Apr 2019 03:50 PM

சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு கூடங்குளம் அணுவுலைகளை ஆய்வு செய்க: வேல்முருகன்

சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு கூடங்குளம் அணுவுலைகளை ஆய்வு செய்திட வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடலோரத்தில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி, கூடங்குளம் அணுவுலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. வரலாறு காணாத அடக்குமுறையை சந்தித்தபோதும், ஆபத்தான அணுவுலைகள் அங்கு மட்டுமல்ல, எங்கும் வேண்டாம் என்பதில் அம்மக்களுக்கு மாற்றுக் கருத்தில்லை.

அணுவுலைத் திட்டத்திலும் சரி, அணுவுலையிலும் சரி, குளறுபடிகளும் குறைபாடுகளும் இருப்பதை அறிந்தது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. எனவே அணுவுலை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

கூடங்குளம் அணுவுலை மீதான இந்தக் குற்றச்சாட்டை இந்திய அரசினரும் அணுசக்திக் கழகத்தினரும் மறுத்து வந்தனர். ஆனால் பழுது, பராமரிப்பு என்று சொல்லி அணுவுலையை அடிக்கடி நிறுத்திவந்தனர்.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அணுவுலையின் செயல்பாடு குறித்து விளக்கம் கோரி மனு செய்தது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. அதில் கிடைத்த தகவல் அதிர்வூட்டுவதாக இருந்தது. அதன்படி கூடங்குளம் அணுவுலையின் முதல் அலகு, 2013 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 47 முறை பழுதாகி நிறுத்தப்பட்டுள்ளது; இரண்டாவது அலகு, 2017 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 19 முறை பழுதாகி நிறுத்தப்பட்டுள்ளது.

அணுவுலை உள்ள வேறு நாடுகளில், பராமரிப்புக்காக மட்டுமே ஆண்டுக்கு ஒரு முறை அணுவுலை நிறுத்தப்படுகிறது. ஆனால் கூடங்குளம் அணுவுலைகள் வந்த நாள் முதல் இந்த நாள் வரை, பழுது காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட நாட்கள் தான் அதிகம். இதனால் கூடங்குளம் அணுவுலைகள் தரமற்றவை, தகுதியற்றவை என்பது நிரூபணமாகிறது.

அண்மையில் இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவரும் அணுசக்தித் துறையின் செயலருமான கமலேஷ் நில்கந்த் வியாஸ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது கூடங்குளம் அணுவுலை அடிக்கடி நிறுத்தப்படுவது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கூடங்குளம் அணுவுலை நிறுத்தம் எண்ணிக்கையானது வழக்கத்திற்கு மாறானதுதான்; அதில் தொடக்க நிலை அதாவது அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன; அதனைச் சரிசெய்ய அணுமின்சக்தி கழகம் தீவிரமாக முயன்றுவருகிறது"என்று பதிலளித்தார்.

இப்படி கூடங்குளம் அணுவுலைகளில் "அடிப்படைப் பிரச்சினைகள்" இருப்பதை  அணுசக்தி கழகத் தலைவரே ஒப்புக்கொண்டதன் மூலம், இடிந்தகரை மக்கள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் நீண்டகாலமாகக் கூறிவரும் குற்றச்சாட்டுகள் உண்மையாகின்றன.

எனவே சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு கூடங்குளம் அணுவுலைகளை ஆய்வு செய்திட வேண்டும்; அதோடு, மேலும் பல அணுவுலைகளை அங்கு அமைக்கும் மோடியின் அணுவுலைப் பூங்கா திட்டத்தையும் கைவிட வேண்டும்" என, வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x