இறந்த யானையின் உடலை பிற விலங்குகளுக்கு உணவாக்கிய வனத்துறை

இறந்த யானையின் உடலை பிற விலங்குகளுக்கு உணவாக்கிய வனத்துறை
Updated on
2 min read

கோவையில் முதன்முறையாக காட்டுக்கு வெளியே இறந்த விலங்கை பிற காட்டுயிர்களுக்கு உணவாக்கும் முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டனர். இதனை வனவிலங்கு ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

ஒரு வளமான காட்டின் குறியீடாக புலி, சிறுத்தை போன்ற  விலங்குகள் கருதப்படுகின்றன. இந்த விலங்குகளின் உணவு மிச்சத்தை உண்ணும் கழுதைப்புலி, செந்நாய், நரி போன்ற உயிரினங்கள் உயிர் சூழல் அடுக்கத்தில் வேட்டை விலங்குகளுக்கு மேலாக உச்சத்தில் உள்ளவை. காட்டை விட்டு ஊருக்குள் புகுவதால் விஷம் வைத்துக் கொல்லப்படும் விலங்குகள் மற்றும் ஆந்தராக்ஸ் போன்ற எளிதில் பரவக்கூடிய கடும் நோய் தாக்கியோ இறந்த விலங்குகளைத் தவிர மற்ற காட்டு விலங்குகளின் உடலை இவ்வகை உயிர்களுக்கு உணவாக்குவது சிறந்தது என வன உயிரின ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை மேட்டுப்பாளையத்தில் உள்ள நெல்லித்துறை கிராமத்தினுள் புகுந்த காட்டு யானையொன்று அங்குள்ள தோப்பில் இருந்த பாக்கு மரத்தைச் சாய்க்க முயற்சித்த போது, அருகில் இருந்த மின்கம்பம் சரிந்ததில் மின்சாரம் தாக்கி இறந்து போனது. நாற்பது வயது மதிக்கத்தக்க இந்த பிரம்மாண்ட ஆண் யானை கடந்த இரண்டு வருடங்களாக மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றி வருகிறது.

மனிதர்களுக்கு எவ்வித தொந்தரவும் தராத இந்த யானையினை இப்பகுதி மக்கள் கட்டைக்கொம்பன் என அழைத்து வந்தனர். ஆரோக்கியமாக வலம் வந்த யானை தீடீரென மின்சாரம் பாய்ந்து பலியானதால் இப்பகுதி மக்களும் வனத்துறையினரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். யானையின் உடல் வழக்கமான பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அதன் தந்தங்கள் அகற்றப்பட்டன.

இந்த நடைமுறைகளுக்குப் பின்பு இறந்த யானையின் உடலை குழிதோண்டி புதைப்பதோ அல்லது தீயிட்டு எரித்து விடுவதோ வனத்துறையினரின் வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால் இறந்த யானை முழு ஆரோக்கியத்தோடு இருந்ததையும் யானையின் இறப்புக்கு மின்சாரத் தாக்குதல் மட்டுமே காரணம் என்பதையும் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் இதுகுறித்து தங்களது உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற ஆலோசனையில் இறந்த யானையின் உடலை காட்டுக்குள் கொண்டு சென்று புலி, சிறுத்தை போன்ற வேட்டை மற்றும் வேட்டை விலங்குகளின் மிச்சத்தை உண்டு வாழும் விலங்கினங்களுக்கு இரையாக வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் யானையின் உடலைத் தூக்கி டிப்பர் லாரியில் வைத்து மேட்டுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். ஏற்கெனவே மேட்டுப்பாளையம் வனச்சரக எல்லைக்குள் புலி, சிறுத்தை போன்ற விலங்கினங்களின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில் இறந்த யானையின் உடல் காராச்சி மரக்குட்டை என்னுமிடத்தில் வைக்கப்பட்டது.

பின்னர் யானையின் உடல் போடப்பட்ட இடத்தில் வனத்துறை கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு இறந்த யானையின் உடலை உண்ணும் விலங்குகளை கண்டறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுவரை வனத்திற்கு வெளியே இறந்த விலங்கினங்களை மீண்டும் காட்டுக்குள் கொண்டு செல்லும் நடைமுறை இல்லாத சூழலில், தற்போது முதன்முறையாக ஒரு பரிசோதனை முயற்சியாக இந்த நடவடிக்கையினை கோவை மாவட்ட வனத்துறை மேற்க்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினரின் இப்புதிய முயற்சியினை வன உயிரின ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in