

பொன் மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நியமனம் செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவர் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதித்தது.
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் தனது அதிரடி நடவடிக்கையால் ஊடகங்களில் பிரபலமாகப் பேசப்பட்டார். ஆனால் முறையான விசாரணை இன்றி கைது செய்வது, ஊடகங்களில் பேட்டி கொடுப்பது, தனக்கு வழங்கப்பட்ட பணியை முடிக்காமல் தன் இஷ்டப்படி செயல்பட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளை சக அதிகாரிகளே அவர் மீது வைத்தனர்.
அறநிலையத்துறை அதிகாரிகளை சகட்டுமேனிக்கு விசாரணையின்றி கைது செய்யப்பட்டதால் சமீபத்தில் உயர் நீதிமன்றம் அவர் மீது அதிருப்தி தெரிவித்தது. ஐஏஎஸ் தகுதி அதிகாரியை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் இன்றி கைது செய்ததும் சர்ச்சையானது.
சாதாரண சிலைகளை விலை உயர்ந்த சிலையாகக் காட்டி கைது செய்ததாக சிலர் டிஜிபியிடமும் மனு அளித்தனர். இந்நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஓய்வுபெறும் நாளில் பொன் மாணிக்கவேலை மீண்டும் சிறப்பு அதிகாரியாக நியமித்தது.
அவரது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் போதும் என்கிற உத்தரவையும் உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் அசோக் பூசன், கே.எம்.ஜோசப் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு பொன் மாணிக்கவேலை நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தனர்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை சற்று மாற்றியுள்ளதாகத் தெரிவித்தனர். தமிழக அரசு சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்தனர். மேலும் உயர் நீதிமன்றம் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமனம் செய்தது ஒரு வருட காலத்துக்கு செல்லும். ஆனால் பொன் மாணிக்கவேலுக்கு யாரையும் கைது செய்வதற்கான அதிகாரம் இல்லை என தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கின் நியமனமும் செல்லும். சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்கிற உத்தரவை மாற்றி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு உயர் அதிகாரியான ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம் தனது விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்து, தமிழக அரசின் மனுவை முடித்து வைத்தனர்.
தீர்ப்பின் சாராம்சம்
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு பொன் மாணிக்கவேலை நியமித்தது செல்லும்.
சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து.
விசாரணை அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை.
நீதிமன்றத்துக்கு மட்டுமே அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்கிற உத்தரவை மாற்றி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு உயர் அதிகாரி ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள அபய்குமார் சிங்கிடம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.