Published : 24 Apr 2019 12:00 AM
Last Updated : 24 Apr 2019 12:00 AM

அதிமுக வேட்பாளர் தேர்வில் தலைதூக்கிய கோஷ்டிப்பூசல்; திருப்பரங்குன்றத்தில் யாருமே எதிர்பார்க்காதவருக்கு `சீட்

மதுரை மக்களவைத் தேர்தலைப் போல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வின்போதும் அதிமுகவில் கோஷ்டி பூசல் தலைதூக்கியது. கடைசியில் இரு அமைச்சர்களும், மாவட்டச் செயலாளரும் பரிந்துரை செய்யாத நபரை வேட்பாளராக தலைமை அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 30 பேர் விருப்பமனு அளித்திருந்தனர். இத்தொகுதி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ளதால் அதன் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பாவின் பரிந்துரையின் பேரில்தான் வேட்பாளர் தேர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சினிமா பைனான்சியர் அன்புசெழியனையும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல், மறைந்த எம்எல்ஏ ஏ.கே.போஸ் குடும்பத்தில் ஒருவரையும் பரிந்துரை செய்தார்.

ராஜன் செல்லப்பாவோ, புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷை மட்டும் பரிந்துரை செய்தார். அவர், தனது மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதி என்பதால், தான் பரிந்துரை செய்த ரமேஷைத்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தலைமைக்கு நெருக்கடி கொடுத்தார். இவர்கள் மூவரையும் நேற்று முன்தினம் இரவு கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கட்சித் தலைமை, ராஜன் செல்லப்பாவிடம், ஏற்கெனவே மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக உங்கள் பரிந்துரையில்தான் உங்கள் மகன் அறிவிக்கப்பட்டார். அதனால், இந்த முறை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும், என்றனர்.

அதற்கு ராஜன் செல்லப்பா தரப்பினரோ, சும்மா வேட்பாளரை அறிவிக்கவில்லை, எனது புறநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து 3 சட்டமன்றத் தொகுதிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொடுத்துவிட்டுத்தான் எனது மகனுக்கு ‘சீட்’ கொடுத்தீர்கள். அதுவும் கட்சித் தலைமை ஒரு பைசாக கொடுக்கவில்லை. என்னுடைய சொந்தச் செலவில் தேர்தல் பணியைச் செய்தேன், என்று போர்க்கொடி உயர்த்தினார்.

அமைச்சர் ஆர்.பி.உதய குமாரோ, தான் பரிந்துரை செய்த நபர்களை அறிவிக்காவிட்டால் ராஜன் செல்லப்பா பரிந்துரை செய்த வழக்கறிஞர் ரமேஷை எக்காரணம் கொண்டும் அறிவிக்கக்கூடாது என்று மற்றொரு புறம் நெருக்கடி கொடுத்துள்ளார். அமைச்சர் செல்லூர் கே.ராஜூவோ, இருவருக்கும் வேண்டாம், நான் பரிந்துரை செய்த அன்புச்செழியனை எல்லோருக்கும் பொதுவாக அறிவியுங்கள், என்று கூறியுள்ளார். வேட்பாளரை இறுதி செய்வதில் பஞ்சாயத்து ஏற்பட்டதால் மூன்று கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களும் கோபித்துக் கொண்டு கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறினர். நேற்று காலை மீண்டும் மூவரையும் அழைத்து ஓ.பன்னீர் செல்வமும், கே.பழனிசாமியும் பேசினர். அதில், யாருக்கும் வேண்டாம் உளவுத்துறை அறிக்கைப்படி பிரமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அறிவிக்கலாம் என்றும், விருப்பமனு கொடுத்த 30 பேரில் முன்னாள் மாநகராட்சி சுகாதாரக்குழுத் தலைவர் முனியாண்டியை தேர்வு செய்துள்ளனர். இவர் வி.வி.ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர். அவரை, தான் பரிந்துரை செய்யாவிட்டாலும் தனது ஆதரவாளர்தானே என்று அமைதியாகிவிட்டார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வழக்கறிஞர் ரமேஷை அறிவிக்காததால் அவரும் அமைதியாகிவிட்டார். அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, இடைத்தேர்தல் நடக்கும் இடம் தனது மாவட்டத்துக்கு உட்பட்டது இல்லை என்பதால் அவரும் ஒரு கட்டத்தில் அமைதியாகிவிட்டார்.

முனியாண்டி கட்சித் தலைமையிடம் பத்தோடு பதினொன்றாக பெயரளவுக்கே விருப்பமனு அளித்திருந்தார். வேட்பாளராவார் என்று கனவிலும் அவர் நினைக்கவில்லை. மூவரின் கோஷ்டி சண்டையில் யாரும் எதிர்பார்க்காமலே முனியாண்டியை தலைமை வேட்பாளராக அறிவித்தது. ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதால் கட்சித் தலைமையே ஒட்டுமொத்த தொகுதியின் செலவையும் செய்ய இருக்கிறது. இதனால், வேட்பாளராகத் தேர்வான முனியாண்டி இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.

எடுபடாமல்போன ஓபிஎஸ் பரிந்துரை

ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் உள்ளார். ஆனால், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அவர் பரிந்துரை செய்த முன்னாள் புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கத்துக்கு ‘சீட்’ கிடைக்கவில்லை.

அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் பரிந்துரை செய்தவர்களை வேட்பாளராக அறிவிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் ஓ.பன்னீர் செல்வம், தனது தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கத்தை மூன்று பேருக்கும் பொதுவாக அறிவிக்கலாமே என்று விருப்பத்தைத் தெரியப்படுத்தினார். அதற்கு மூவருமே சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மட்டும் முத்துராமலிங்கத்தை வேண்டுமென்றாலும் அறிவியுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு செல்லூர் கே.ராஜூவும், ராஜன் செல்லப்பாவும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒருங்கிணைப்பாளராக இருந்தும்கூட ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரை எடுபடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x