

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக அமமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மகேந்திரன் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., மட்டுமல்ல டிடிவியின் தீவிர விசுவாசியும்கூட.
தகுதி நீக்கம், உறுப்பினர்கள் மறைவு உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.
மீதமுள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதிமுக இன்று (திங்கள்) மாலை அறிவிக்கவுள்ளது. இந்நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் இன்று காலை அறிவிக்கப்பட்டனர்.
இவர்களில், மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளார் இ.மகேந்திரன் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., மட்டுமல்ல டிடிவியின் தீவிர விசுவாசியும்கூட.
இவருக்கு 54 வயது. பி.காம் பட்டதாரி. மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். 1983 முதல் அதிமுகவில் உறுப்பினராகவும், அதனைத் தொடர்ந்து அம்மா பேரவையின் மாவட்ட இணைச் செயலாளராகவும் பணியாற்றினார்.
டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டபோது அதனைக் கண்டித்து உசிலம்பட்டியில் மிகப்பெரிய கண்டன ஆரப்பாட்டத்தை நடத்தினார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார்.
2001 முதல் 2006 வரை உசிலம்பட்டி நகராட்சி தலைவராகவும், 2006 முதல் 2011 வரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். உசிலம்பட்டி தொகுதியில் இவரை "உசிலையின் செல்லப்பிள்ளை மகேந்திரன்" என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இவரது சகோதரர் மதுரையில் சாலை ஒப்பந்ததாரராக இருக்கிறார்.
பணபலமும் அதிகார பலமும் சாதி வாக்குகள் பலமும் நிறைந்த பின்னணி கொண்டவரான மகேந்திரனை வேட்பாளராக அமமுக நிறுத்தியதன் மூலம் அதிமுகவுக்கு சவால் விடுத்திருக்கிறது.
அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.