Published : 07 Apr 2019 05:27 PM
Last Updated : 07 Apr 2019 05:27 PM

கல்லூரி மாணவி கொலை: அத்தை மகன் கைது

பொள்ளாச்சி கொலை சம்பவத்தில் கல்லூரி மாணவியின் அத்தை மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், ராகவநாயக்கன் பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் மகள்  பிரகதி (20). கோவையில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

பிரகதியும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த நாட்டுதுரையும் விரும்பியதன் பேரில் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் ஜூன் 13-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

பிரகதி வெள்ளிக்கிழமை அன்று மாலை கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்குக் கிளம்பியுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை. போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இரவு முழுவதும் பிரகதி வீட்டுக்கு வரவில்லை. அவரை இரவு முழுவதும் தேடிய பெற்றோர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திலும் கோவை காட்டூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

போலீஸார் புகாரைப் பெற்ற நிலையில் நேற்று மாலை பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் பூசாரிப்பட்டி சாலையோரம் முட்புதரில் மாணவி பிரகதியின் உடல் காயங்களுடன் பிணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

மாணவியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொலை செய்தவர்கள் பிரகதிக்குத் தெரிந்த நபர்களாகத்தான் இருப்பார்கள் என போலீஸார் கருதினர். நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், பிரகதியின் செல்போன் சிக்னலை வைத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது செல்போன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது.

பிரகதி காணாமல் போன வெள்ளிக்கிழமை போலீஸ் சந்தேகத்தின்பேரில் அவரது அத்தை மகன் சதீஷ் குமாரை அழைத்து விசாரித்துள்ளனர். போலீஸாரிடம் சதீஷ்குமார் பிரகதியைக் கொன்றது தாம்தான் என ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சதீஷ் குமாரும் பிரகதியும் விரும்பியதாகவும், பிரகதியை தனது திருமணம் செய்து வைக்கச் சொல்லி சதீஷ் குமார் கேட்க அவர் 15 வயது பெண் படிக்க வைக்க உள்ளோம் என்று மறுத்துவிட்டனர்.

பின்னர் சதீஷ் குமாருக்கு வேறு இடத்தில் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. பிரகதிக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சதீஷ் குமார் வெள்ளிக்கிழமை பிரகதியை நேரில் அழைத்துப் பேசியுள்ளார். பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி அருகே சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில் ஆத்திரம் அடைந்த  சதீஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகதியை குத்தி கொன்றதாக தெரிகிறது. கொலையை சதீஷ் குமார் மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை, வேறு சிலரும் உதவி செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x