Published : 05 Apr 2019 11:39 AM
Last Updated : 05 Apr 2019 11:39 AM

மதுரையில் வேகம் இல்லாத அமமுக பிரச்சாரம்- பின்னணியில் அதிமுக உள்ளதா?

மதுரையில் வேட்பாளர் தரப்பில் இருந்து தேர்தல் பணிகளுக்குப் பணம் கொடுக்காததால் அமமுக நிர்வாகிகள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பு இல்லாமல் முடங்கிவிட்டனர். ஆனால், அதிமுக தரப்பில் இவர்களை `நன்கு கவனித்து' மடக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதி எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இடைத்தேர்தலுக்கு நிகராக அதிமுகவினர் தாராளமாக செலவு செய்கின்றனர். இந்தத் தொகுதியில் அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை போட்டியிடுகிறார்.

 வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையை தனி ஆளாக அக்கட்சியினர் தவிக்கவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் செல்லும் இடங்களில் மட்டுமே அமமுக தேர்தல் பணிகளும், பிரச்சாரமும் நடப்பதாகவும், மற்ற இடங்களில் நிர்வாகிகள் சுறுசுறுப்பு இன்றி முடங்கிவிட்டதாகவும் கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர்.

அமமுகவுக்கு இந்தத் தேர்தலில் பரிசுப் பெட்டி சின்னம் முதல் முறையாக வழங்கப்பட்டது. இந்தப் புதிய சின்னத்தை மாநகர அமமுகவினர் இதுவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க ஆர்வம் காட்டவில்லை. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சியினர், வேட்பாளருக்காகக் காத்திருக்காமல் மாநகரில் வார்டு, வார்டாக வீடுகள்தோறும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் போல் அமமுகவில் உள்ள பகுதி நிர்வாகிகள், இளைஞர்கள், தொண்டர்கள், தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர்.

ஆனால், மாநகர மாவட்ட நிர்வாகிகள் வேட்பாளர் வரட்டும், தேர்தல் பணிக்கு இன்னும் பணம் தரவில்லை, அவர் வந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அடக்கி வாசிக்கின்றனர். அதனால், வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை செல்லும் இடங்களில் மட்டும் தற்போது அமமுக தேர்தல் பணி நடக்கிறது.  அமமுக நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாததன் பின்னணியில் அதிமுக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எப்படியும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் வியூகம் வகுத்து வரும் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனின் தந்தை ராஜன் செல்லப்பா, அமமுக நிர்வாகிகளை `நன்கு கவனித்து' வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அமமுக நிர்வாகிகள் தங்கள் கட்சி வேட்பாளருக்கான பிரச்சாரத்தில் அடக்கி வாசிப்பதாக பேச்சு அடிபடுகிறது.

இதுகுறித்து அமமுக கட்சியினர் கூறுகையில், ‘‘அமமுகவைப் பொருத்தவரையில் பொதுமக்களுக்கு பணம் கொடுக்கும் திட்டம் இல்லை. ஆனால், தேர்தல் பணிகளுக்கு கட்சியில் இருந்து இதுவரை பணம் வரவில்லை. வேட்பாளர் தரப்பில் இருந்து ‘பூத்’ கமிட்டிக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் சிறிய தொகை  வழங்கப்பட்டது. ஆனால், நிர்வாகிகள் தரப்பில் தேர்தல் செலவுக்குப் பணம் கேட்கிறார்கள். வேட்பாளர் தரப்பில் டிடிவி.தினகரன் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்.

நிர்வாகிகள் தரப்பில் சொந்தப் பணத்தை செலவு செய்ய யாரும் தயாராக இல்லை. நிர்வாகிகளிடம் கேட்காமல் பிரச்சாரத்துக்குச் செல்ல முடியாது என்பதால் தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிமுக தரப்பு அதைச் சாதகமாகப் பயன்படுத்தி அப்பகுதியில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். வேட்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் அமமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். டிடிவி.தினகரன் வந்து சென்ற பிறகுதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x