Published : 29 Apr 2019 05:42 PM
Last Updated : 29 Apr 2019 05:42 PM

ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் நிலையில் வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

குழந்தையை விற்பது சம்பந்தமாக அமுதா என்கிற பெண் பேசிய ஆடியோ தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தத்துக்கொடுப்பதற்காக பிள்ளையில்லாப் பெற்றோருக்கு குழந்தைகளை பொம்மைகளை விற்பதுபோல் நிறம், ஆண்,பெண் என பிரித்து ரேட் பேசுவதும், நாளைக்கு ஒரு பீஸ் வருகிறது என்று பேசுவது குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவரது செயலை செய்து வந்ததை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

இதையடுத்து இந்த விவகாரம் பெரிதானது. போலீஸார் உடனடியாக சம்பந்தப்பட்ட அமுதவள்ளியையும் அவரது கணவர் ரவிச்சந்திரனையும் கைது செய்தனர். அமுதவள்ளி அளித்த தகவலின் பேரில் கொல்லிமலையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோடு தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த பர்வீன் என்ற செவிலியர் ஆகிய இருவரிடம்  தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலைவாழ் மக்கள் அறியாமை, வறுமையைப் பயன்படுத்தி 10 குழந்தைகளை வாங்கி விற்றதாகக் கூறியுள்ளார்.

தனியார் கருத்தரிப்பு மைய செவிலியரான பர்வீன் கருத்தரிப்பு மையத்தில் கருமுட்டைகளை பெற்றுத்தரும் பொறுப்பில் இருந்துள்ளார். இதைப் பயன்படுத்தி கருத்தரிக்கும் வாய்ப்பில்லாத தம்பதிகளை வாடிக்கையாளர்களாக மாற்றியுள்ளார்.

நாமக்கல், திருச்சி, மதுரை என பல மாவட்டங்களில் 4 குழந்தைகளை விற்றதாக பர்வீன் கூறியுள்ளார். இன்று கைதான பர்வீன்  தனது வாக்குமூலத்தில் இடைத்தரகர்களாகச் செயல்படும் 3 பெண்களின் பெயரைக் கூறியுள்ளார். அவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்படி பர்வீனுக்கு உதவிய கூட்டாளிகள் நசீனா (எ) நிஷா, அருள்சாமி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

செவிலியர் பர்வீன், அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோருக்கு உள்ள தொடர்பைக் கண்ட போலீஸார் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதாகத் தெரிந்துகொண்டனர்.

அமுதா மற்றும் அவருடைய கணவர் ரவிச்சந்திரனின் வங்கிக் கணக்கை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் அவர்களுடன் பணப் பரிமாற்றம் செய்தவர்கள் என பெரும் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம், ஈரோடு என பல மாவட்டங்களிலிருந்து பணப் பரிமாற்றம் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பர்வீன், அமுதா மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தவிர மேலும் 6 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தமிழகம் முழுதும் பெரிய அளவில் வலைப்பின்னல் போன்று இருக்கலாம் என்பதால் வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x