

பெரம்பலூர் அருகே காரில் நூதன முறையில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட ரூ.1.99 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணம் இருப்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இதுபற்றி ரகசிய தகவல் அளித்த நபர் திட்டவட்டமாக கூறியதைத் தொடர்ந்தே பணம் கைப்பற்றப்பட்டது.
பெரம்பலூர் அருகே பேரளி சுங்கச்சாவடி பகுதியில் ஆலத்தூர் ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறை ஏடிஎஸ்பி ரங்கராஜன் தலைமையிலான போலீஸார் நேற்றுமுன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீஸாருக்கு ரகசிய நபர் ஒருவர் மூலம் காரில் பணம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதில் காரின் பதிவு எண் (TN-31BU-0585) உள்ளிட்ட விவரங்களை அவர் தெரிவித்திருந்தார். அதன்படி 11 மணியளவில் திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூர் நோக்கிச் சென்ற கார் ஒன்று பேரளி சுங்கச்சாவடிக்கு வந்தது. இதையடுத்து போலீஸாரும் பறக்கும்படை அதிகாரிகளும் சுறுசுறுப்படைந்தனர். அந்த வாகனத்தை சோதனையிட்டபோது அதில் பணம் எதுவும் இல்லை. மாறாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகள், துண்டுகள் சில இருந்தன.
ஆனாலும், அதிகாரிகளுக்கு சந்தேகம் தீரவில்லை. காரை விட்டுவிடுவதா வேண்டாமா என குழப்பம் அடைந்தனர். பின்னர் காரை ஓரமாக நிறுத்தி தீவிரமாக சோதனையிட ஆரம்பித்தனர். அப் போதும் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து காரில் வந்த விடு தலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கள் கோபமடைந்து போலீஸார் மற்றும் பறக்கும்படை அதிகாரிகளு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த ரகசிய நபரை போலீஸார் தொடர்புகொண்டு பேசியபோது “அந்தக் காரில் பணம் எதுவும் இல்லை. உண்மை யான தகவலை மட்டும் உறுதி செய்துவிட்டு எங்களுக்குத் தெரிவியுங்கள். பொய்யான தகவலை அளித்து எங்கள் நேரத்தை விரயம் செய்வதுடன், அரசியல் கட்சியினரிடம் அவமானத்தை தேடிக் கொடுக்க வேண்டாம்” என கடிந்து கூறியுள்ளனர்.
ஆனால் அந்த ரகசிய நபரோ, "நான் சொல்வது நூறு சதவீதம் உண்மை. கார் முழுவதும் தீவிரமாக சோதனையிடுங்கள். நான் சொன் னது உண்மை என்பதை புரிந்து கொள்வீர்கள்” என திட்டவட்டமாகத் தெரிவித்தாராம். அதன் பிறகே காரை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, குன்னம் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் காரை மீண்டும் சோதனையிட்டனர்.
அப்போதுதான், காரின் கதவுகளின் உள் பகுதியிலும் பயணிகள் அமரும் சீட்டுக்கு அடியிலும் கட்டுக்கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அவை மொத்தம் ரூ.1 கோடியே 99 லட்சத்து 77 ஆயிரத்து 500 இருந்தது. அதுவரை, சிரித்தபடி காணப்பட்ட விசிக பிரமுகர்களின் முகம் அதன் பிறகு வாடத் தொடங்கியது.
இந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன், முன்னாள் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் தங்கதுரை, சென்னையைச் சேர்ந்த மாரஸ், தங்கம் ஆகியோரையும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் வருமான வரித்துறையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரும் வருமான வரித்துறையினரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் பறிமுதல் செய்யப்பட்ட இடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறை சோதனை
இதனிடையே, பொதுமக்களி டம் கவர்ச்சித் திட்டங்களைக் கூறி, முதலீடு செய்ய வைத்து சுமார் ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ‘எல்பின் இ-காம்' என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த மாதம் மார்ச் 4-ம் தேதி வருமான வரித் துறையினர் சோதனையிட்டனர்.
இந்நிலையில், இந்த நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை 10.30 மணி முதல் சோதனை நடத்தினர். மாலை 6 மணியைத் தாண்டியும் இது நீடித்தது.
இந்நிறுவனத்தின் பங்கு தாரரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணைச் செயலாளர் ராஜா, இவரது சகோதரர் விசிக அச்சு ஊடக அணி மாநில துணைச் செயலாளர் ரமேஷ் ஆகியோரின் கே.கே.நகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே விசிக பிரமுகர்களின் காரிலிருந்து ரூ.1.99 கோடி பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப் படுகிறது. இதுகுறித்து போலீஸார் கூறியபோது, ‘‘பெரம்பலூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் இங்கிருந்துதான் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அது உண்மையா, அப்படியெனில் யாருக்கு, எதற்காக கொடுத்து அனுப்பினர் என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷ், ராஜா ஆகிய இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால், அக்கட்சியின் தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டதா எனவும் விசாரிக் கப்பட்டு வருகிறது" என்றனர்.