

சிறந்த கைவினைஞர்கள் 14 பேருக்கு ‘பூம்புகார் மாநில விருது’, கைதேர்ந்த மூத்த கைவினைஞர்கள் 10 பேருக்கு ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருது வழங்கப்படுகிறது. இதன் அடையாளமாக ஒருசில கைவினை ஞர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் கைவினைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பூம்புகார் விருது, 2002-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் ‘மாநில விருது’ என்ற அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நுட்பமான ஆய்வுக்குப் பிறகு தெரிவு செய்யப்பட்ட 10 சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது ஒவ்வொன்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
2013-14ம் ஆண்டுக்கான பூம்புகார் மாநில விருதுக்கு 14 கைவினைஞர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். அவர்களுக்கு விருது வழங்கும் அடையாளமாக ஒரு கைவினைஞருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா கடந்த 28-ம் தேதி விருது வழங்கி கவுரவித்தார்.
‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’
‘‘ஜப்பான் நாட்டின் வாழும் தேசிய பொக்கிஷங்கள்’’ என்ற விருதை 7 விதமான கலைப் பொருட்கள் தயாரிக்கும் கைவினை ஞர்களுக்கு ஜப்பான் அரசு வழங்கி வருகிறது. அதுபோல, தமிழகத்திலும் கைத்திறன் தொழிலில் சிறந்து விளங்கி அதற்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட கைவினை ஞர்களுக்கு ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ என்ற உயரிய விருது வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அறிவித்தார்.
பஞ்சலோக சிற்பங்கள், பித்தளை விளக்குகள், பித்தளை கலைப் பொருட்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள், மர சிற்பங்கள், கற் சிற்பங்கள், சுடுகளிமண், கலம்காரி, பத்திக், அப்ளிக் துணி ஓவியங்கள், காகிதக்கூழ் பொம்மைகள், பாய் நெசவு, மூங்கில் மற்றும் பனை ஓலை பொருட்கள், நெட்டி வேலை, நார் பொருட்கள், கோயில் நகைகள், சித்திரத் தையல் வேலை, இதர கைவினைப் பொருட்கள் என 16 விதமான கைத்திறன் தொழில்களில் இருந்து கைதேர்ந்த 65 வயதுக்கும் மேற்பட்ட 10 கைவினைஞர்களை தேர்வுக் குழு மூலம் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது பெறும் கைவினைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், தாமிரப் பத்திரம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில், 2013 - 14ம் ஆண்டுக்கான ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதை 10 கைவினைஞர்களுக்கு வழங்கும் அடையாளமாக 6 பேருக்கு முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கி கவுரவித்தார்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.