Last Updated : 26 Apr, 2019 01:47 PM

 

Published : 26 Apr 2019 01:47 PM
Last Updated : 26 Apr 2019 01:47 PM

கீழடி அகழாய்வு போன்று பொற்பனைக் கோட்டையிலும் அகழாய்வு நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழடி அகழாய்வு போன்று, தமிழர்களின் பழங்கால வரலாற்றைப் பறைசாற்றும் ஏராளமான பொருட்கள் புதைந்து கிடக்கும் பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு நடத்த மத்திய, மாநில தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மேலபனையூரைச் சேர்ந்த கரு.ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

"புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் நாட்டிலேயே பழமையான 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 20 அடி அகல பழமையான கோட்டை உள்ளது. இந்தக் கோட்டையின் முக்கியத்துவம் தெரியாமல் கோட்டையில் அதிகாரிகள் தார் சாலை அமைத்துள்ளனர்.

இங்கு 2,500 ஆண்டு கால பழமையான இரும்பு உருக்கும் ஆலை செயல்பட்டுள்ளது. இருப்பினும் பொற்பனைக் கோட்டையை தொல்லியல் பகுதியாக அறிவிக்காமல், அகழாய்வு நடத்தாமல் அதிகாரிகள் உள்ளனர். இதனால் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்".

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியம் வாதிடுகையில், "சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் தமிழர்களின் வரலாற்றுப் பின்னணியை நிரூபிக்கும் ஏராளமான பொருட்கள் பூமிக்கடியில் இருந்து எடுக்கப்பட்டன. அதேபோல், பொற்பனைக் கோட்டையும் வரலாற்று முக்கியத்துவம் இடமாகும். இங்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டுள்ளது.

பல வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து இரும்பு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த இடத்தின் முக்கியத்துவம் தெரியாமல் அதிகாரிகள் உள்ளனர். இதனால் இங்கு அகழாய்வு நடத்த வேண்டும்" என்றார்.

இதையடுத்து, பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு நடத்த மத்திய, மாநில தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x