Last Updated : 15 Apr, 2019 12:00 AM

 

Published : 15 Apr 2019 12:00 AM
Last Updated : 15 Apr 2019 12:00 AM

மின்வாரிய கவுன்ட்டர்களில் நுகர்வோர் எண்ணைப் பயன்படுத்தி மின்கட்டணம் செலுத்தும் வசதி: விரைவில் ஏற்படுத்த நுகர்வோர் வலியுறுத்தல்

தொலைபேசி பில் கட்டணத்தைச் செலுத்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பணம் கட்டுவது போல், மின்வாரிய கவுன்ட்டர்களில் மின்கட்டணத்தைச் செலுத்த நுகர்வோர் எண்ணைப் பயன்படுத்தி மின்கட்டணம் செலுத்தும் வசதியை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என நுகர்வோர் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 2.82 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில், வீடுகளுக்கான இணைப்புகள் 1.91 கோடியும், 21 லட்சம் விவசாய இணைப்புகளும், 11 லட்சம் குடிசைகளுக்கான இணைப்புகளும், 30 லட்சம் வணிக இணைப்புகளும் 8,500 உயரழுத்த தொழிற்சாலை இணைப்புகளும் அடங்கும். இந்த மின் இணைப்புகள் மூலம் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.3,000 கோடி வருவாய் மின்வாரியத்துக்கு கிடைக்கிறது.

மின்நுகர்வோர் மின்கட்டணத்தை முன்பு மின்வாரிய அலுவலகங்களில் மட்டுமே செலுத்தி வந்தனர். இதற்காக, தமிழகம் முழுவதும் 3,500 மையங்களில் 5,000 கவுன்ட்டர்கள் உள்ளன. பின்னர், மின்கட்டணங்களை மின்வாரிய இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு, அஞ்சல் நிலையங்கள், அரசு இ-சேவை மையங்கள், சில குறிப்பிட்ட வங்கிக் கிளைகள், மொபைல் ஆப்ஆகியவற்றின் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றில், பணம், வரைவோலை (டிடி), டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.

இவ்வளவு வசதிகள் இருந்தும் மின்வாரிய அலுவலக கவுன்ட்டர்களில் நுகர்வோர் மின்கட்டணம் செலுத்த, நுகர்வோர் எண்ணைக் கூறினால் பணம் வாங்க மறுக்கின்றனர். மாறாக, ரீடிங் எடுக்கப்பட்ட மின்கணக்கீட்டு அட்டையையும் கொண்டு வந்தால்தான் கட்ட முடியும் எனக் கூறி அலைக்கழிக்கின்றனர்.

இதுகுறித்து, மின்நுகர்வோர் கூறியது:மின்வாரிய அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் ரீடிங் எடுக்கப்பட்ட மின்கணக்கீட்டு அட்டையைக் கொண்டு சென்றால்தான் பணம் கட்ட முடிகிறது. மாறாக, நுகர்வோர் எண்ணைக் கூறினால் பணம் வசூலிக்க மறுக்கின்றனர்.

மேலும், இணையதளம் மூலம் கட்டலாம் என்றால், மின்வாரிய இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து யூசர் நேம், பாஸ்வேர்டு இருந்தால்தான் கட்ட முடிகிறது. நேரடியாக நுகர்வோர் எண்ணைக் கொண்டு பணம் கட்ட முடியவில்லை.

மேலும், வாடகை வீடுகளில் வசிக்கும் நுகர்வோர் தங்களது வீட்டுக்கான மின்கட்டணத்தை இணையதளத்தில் கட்ட விரும்பினால், வீட்டின் உரிமையாளர் ஏற்கெனவே பதிவு செய்துள்ள யூசர் நேம், பாஸ்வேர்டை செயலிழக்கச் (டி-ஆக்டிவேட்) செய்த பிறகு புதிதாக யூசர் நேம், பாஸ்வேர்டு உருவாக்கிய பிறகுதான் கட்ட முடிகிறது.இல்லையென்றால் கட்ட முடியவில்லை.

தொலைபேசிக்கான பில் கட்டணங்களை இணையதளத்தில் செலுத்தும்போது தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டாலே போதும் எளிதாகப் பணத்தைக் கட்டி விடலாம். அதற்கு யூசர் நேம், பாஸ்வேர்டு தேவையில்லை. அதேபோல், மின்கட்டணம் செலுத்துவதற்கும் நுகர்வோர் எண்ணைக் குறிப்பிட்டு செலுத்தும் வசதியை மின்வாரிய அலுவலகங்களில் ஏற்படுத்த வேண்டும்.

TANGEDCO (டான்ஜெட்கோ) எனப்படும் மொபைல் செயலியில் எந்த அலைச்சலும் இல்லாமல் பணம் கட்ட முடிவதால், இந்த செயலியில் மின் கணக்கீட்டு எண்ணைச் சேர்த்து, பணம் கட்டும் முறையை மேலும் எளிதாக்குவது பயனீட்டாளர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும் என்றனர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “இதுகுறித்து நுகர்வோரிடமிருந்து எங்களுக்கும் இதுதொடர்பாக கோரிக்கைகள் வந்துள்ளன. இப்பிரச்சினையைத் தீர்க்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x