Published : 18 Apr 2019 02:00 PM
Last Updated : 18 Apr 2019 02:00 PM

மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 159 பேர் தேர்தலில் வாக்களிப்பு

மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ள 159 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் வாக்களித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் ஏறக்குறைய 900 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சுயமாக வாக்களிக்கத் தகுதியுடைய 159 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், மனநலக் காப்பகப் பேராசிரியர்களும் உருவாக்கித் தந்துள்ளனர். இதற்காக மனநலக் காப்பகத்துக்குள்ளேயே சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

900 பேரில் இருந்து, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு 159 வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர் மனநலக் காப்பகப் பேராசிரியர்கள். மனநலக் காப்பகம் அமைந்துள்ள பகுதி மத்திய சென்னை தொகுதிக்குள் வருவதால், அந்தத் தொகுதியின் வேட்பாளர்கள் யார், அவர்கள் சார்ந்துள்ள கட்சி, அவர்களின் சின்னம் ஆகியவை குறித்து இரண்டு நாட்களாகப் பயிற்சி அளித்தனர். அதன்படி தற்போது வரை 140 பேர் வாக்களித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் என்று சொல்லியே அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதால், அவர்களுக்கான உரிமையைத் தரும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் கண் பார்வையற்ற, செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமை தரப்பட்டது.

தற்போது மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் சுயமாகச் சிந்திக்கக்கூடியவர்களுக்கும் வாக்குரிமை தரப்பட்டது ஜனநாயகத்தின் முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x