

கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவருக்காக பாஜகவின் தேசியத் தலைவர்களும் பிரச்சாரம் செய்ய வந்த வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் 02.04.2019 அன்று (செவ்வாய்) பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித் ஷா சிறப்பு பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்.
கோவை சிவானந்தா காலனியில் சிறப்பு பொதுக்கூட்ட மேடை. அந்த மேடையில் முகப்பிலும், பின்னணி பேனரிலும் பாஜக, அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சித் தலைவர்களின் படங்களும் இடம் பெற்றிருந்தன.
வெளி முகப்பில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பாஜக சின்னம் தாமரை போன்றவை இடம் பெற்றிருந்தன. மேடை பேக் டிராப்பில் மோடி, அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி, தமிழிசை சவுந்தரராஜன், ராமதாஸ், விஜயகாந்த், ஜி.கே. வாசன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., கொமுக பெஸ்ட் ராமாசமி, ஏ.சி.சண்முகம், தனியரசு, சரத்குமார் என சகலரையும் பார்த்துப் பார்த்து படங்களாக பொறித்திருந்தனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக மேடையில் இடது புறம் ஜனசங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஷியாம் பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யா நடுவே பாரத் மாதா படங்கள் மாலையிடப்பட்டு அஞ்சலி செலுத்தும் தன்மையில் காணப்பட்டன. அதே போல் மேடையில் வலதுபுறம் மறைந்த அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் மாலை சூடப்பட்டு அதே அஞ்சலி மரியாதையுடன் காணப்பட்டன.
இத்தனை பேரின் படங்களை வைத்திருந்தவர்கள் எந்த இடத்திலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படத்தை தப்பித்தவறி மறந்தும் கூட எந்த இடத்திலும் பொறித்து விடவில்லை.
அதற்குப் பிறகு கோவையில் அமித் ஷாவுக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்கள், சிபிஆர் வாக்கு கேட்கும் கோரிக்கை பேனர்களை ஆராய்ந்து பார்த்ததில் எங்கும், எதிலும் வாஜ்பாய் படத்தையே காண முடியவில்லை. முன்னாள் துணை பிரதமர் அத்வானியை தான் ஆட்சிக்கு வந்த பின்பு வெளிப்படையாகப் புறக்கணித்து வருகிறார் மோடி என்பது உலகறிந்த செய்திதான்.
''ஆனால் இந்த தேர்தல் நேரத்தில் கூட வாஜ்பாயைப் புறக்கணிக்கலாமா? அதிலும் கூட்டணியில் இருக்கும் உள்ளூர் தலைவர்களை எல்லாம் தேடித்தேடி படம் பொறித்து வைக்கும் பொதுக்கூட்ட மேடையில் கூடவா இப்படி புறக்கணிக்க வேண்டும். மலர் மாலையிடப்பட்டு அஞ்சலி செலுத்தும் வண்ணம் வைக்கப்பட்டிருந்த ஜனசங்க, அதிமுக தலைவர்கள் படத்துடன் அல்லவா அவர் படத்தையும் மாலையிட்டு வைத்திருக்க வேண்டும்?'' என்ற கேள்வியை பாஜகவினர் சிலரிடம் கேட்டேன்.
''எப்போ மோடி ஆட்சிக்கு வந்தாரோ அப்பவே இது ஆரம்பிச்சுருச்சு. அத்வானி மட்டும்தான் வெளியில் எல்லாம் தெரிஞ்சுது. ஆனா வாழும் மகாத்மான்னு வாஜ்பாய் பிரதமரா இருந்தபோது வாயாற யாரெல்லாம் புகழ்ந்து அவர் மூலமாக பதவி சுகம் அனுபவித்தார்களோ, அவர்களேதான் அவரை இறந்த பின்னும் இப்படி புறக்கணிக்கும் வேலையை செய்கிறார்கள். மோடியைப் பொறுத்தவரை பாஜக உருவானதும், வளர்ந்ததும் மோடியால்தான் என்ற பிம்பத்தை நாடு முழுவதும் உருவாக்கும் விதமாகவே செயல்பட்டு வருகிறார். மோடி, தாமரை- தாமரை, மோடி இந்த இரண்டு படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்பதே இப்போதைய நிலைமை. அதற்காகவே மூத்த தலைவர்கள் இருட்டடிப்பு சர்வ சாதாரணமாக நடக்கிறது.
மோடி சொல்கிறாரோ இல்லையோ தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழிசை, சிபிஆர் போன்ற எங்கள் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மோடியைத் திருப்திபடுத்துவதற்காகவே வாஜ்பாய் படத்தை தன் பேனர்களில் வைப்பதேயில்லை. ஜனசங்கத்தை நிறுவிய தலைவர்கள் படங்கள் இரண்டை இங்கேயாவது இப்படி வைத்திருக்கிறார்கள். பாஜக போட்டியிடும் மற்ற தொகுதிகளில் பிரச்சாரத்தின் போது அந்தப் படங்களை பயன்படுத்துவார்களா தெரியவில்லை. இங்கே மட்டும் அவற்றை பயன்படுத்துவதற்குக் காரணம் இங்குள்ள ஜனசங்கப் பொறுப்பாளர் இது விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். அவர் நிர்பந்தத்தில்தான் அதையும், பாரத மாதா படத்தையும் தவிர்க்க முடியாமல் வைத்து இருக்கிறார்கள்.
இதையெல்லாம் உண்மையான பாஜக தொண்டன் பார்த்து மனம் வெதும்பிக் கொண்டுதான் இருக்கிறான். உள்ளூரில் ஊர் பேர் தெரியாமல் லெட்டர் பேடு கட்சி போல் இருக்கும் ஆட்களின் பெயர்களைக் கூட பேனர்களில் படம் காட்டும் கட்சியினருக்கு வாஜ்பாய் கண்ணுக்குத் தெரியவில்லை பாருங்கள்!'' என்றனர் வேதனை பொங்க.