

பெரியார் சிலை உடைக்கப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகுப்புவாத சக்திகள் கைது செய்யப்பட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, கே.எஸ். அழகிரி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சமீபகாலமாக அரசியல் ரீதியாக தமிழகத்தில் காலூன்ற முடியாத பாஜக பல்வேறு தவறான உத்திகளை கையாண்டு வருகிறது. மத ரீதியாக மக்களை திரட்டுவதற்காக பேசாததையெல்லாம் பேசியதாக கூறி கயிறு திரித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதை அப்பட்டமாக திரித்துக் கூறி மத உணர்வுகளை புண்படுத்தியதாக மிகமிக இழிவான பிரச்சாரத்தை தமிழகத்திலுள்ள வகுப்புவாத சக்திகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.
இத்தகைய சக்திகள் பிரச்சாரத்தோடு நிற்காமல் புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள பெரியாரின் சிலையின் தலையை துண்டிக்கிற மிகக் கொடூரமான நிகழ்வு நடந்திருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கடுமையாக கண்டிக்கிறேன்.
ஈராயிரம் ஆண்டுகளாக மதம், சாதியின் பெயரால் சனாதன கொள்கைகளின் பெயரால் அடக்கி, ஒடுக்கப்பட்டிருந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு அடிப்படை உரிமைகளையும், சமூக நீதியையும் பெற்றுத் தந்தவர் பெரியார். தமிழ் சமூகத்திற்கு எவருமே ஆற்ற முடியாத அரும்பெரும் பணிகளை செய்த பெரியாரின் சிலையை தமிழகத்திலுள்ள வகுப்புவாத சக்திகள் இத்தகைய வன்முறைச் செயலின் மூலம் சிலைக்கு சேதாரம் ஏற்படுத்தியது குறித்து காவல்துறையினர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய செயலை செய்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகுப்புவாத, பாசிச, பிற்போக்கு சக்திகளை அடையாளம் கண்டு, வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் பெரியார் மீது பற்று கொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அணி திரண்டு கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படுமென தமிழக அரசை எச்சரிக்கிறேன்" என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.