கோடநாடு விவகாரம் தொடர்பாக தேர்தல் பரப்புரையில் பேசிய ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு விவகாரம் தொடர்பாக தேர்தல் பரப்புரையில் பேசிய ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கோடநாடு விவகாரம் தொடர்பாக தேர்தல் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அளித்துள்ள அறிவுரையில் நிரூபிக்கப்படாத, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில்  பயன்படுத்தகூடாது என்றும், இருந்தபோதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் விதிகளை மீறி நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோடநாடு விவகாரம் தொடர்பாக பேசவோ, எழுதவோ அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த மாத்யூ சாமுவேல் உள்ளிட்டவர்களுக்கே உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், ஸ்டாலின் மட்டும் அதுதொடர்பாக பொது வெளியில் பேசி வருவதாகவும், இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் மார்ச் மாதம் 22 ஆம் தேதி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டு, தன் மனுவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாபு முருகவேல் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் பேச்சு குறித்து அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த முசிறி திமுகவுக்கு இன்று காலை நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேர்தல் அதிகாரி அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் ஆணையம் உரிய முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஆணைய விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், அதிமுக அளித்த புகாரில் ஆணையம் நடவடிக்கை எடுத்துவிட்டதால் மேற்கொண்டு வழக்கு நிலைக்கத்தக்கதில்லை என்பதால் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தேர்தல் ஆணைய விதிகளில், வேட்பாளருக்கு எதிராகத்தான் ஆதாரமற்ற அல்லது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் மனுதாரர் பாபு முருகவேல் கூறும் குற்றச்சாட்டில், பேசியவரும் வேட்பாளர் இல்லை, யாரைப்பற்றி பேசினாரோ அவரும் வேட்பாளர் இல்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in