

சென்னை, நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங் களில் வருமானவரித் துறை அதிகாரி கள் நேற்று திடீர் சோதனை நடத் தினர். இதில் ரூ.13.80 கோடி சிக்கிய தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மக்களவைத் தேர் தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான இடைத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் அரசி யல் கட்சியினர் பணம், பரிசுப் பொருட் களை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்துவிடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.
இதற்காக பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு ஆகிவற்றை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளது. பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் வாகன சோதனை மற்றும் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வருமான வரித் துறை அதிகாரிகளும் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு வேலூ ரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, அவரது மகனும் வேலூர் மக்கள வைத் தொகுதி திமுக வேட்பாளரு மான கதிர்ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் சோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரின் சிமென்ட் குடோனில் நடந்த சோதனை யில் ரூ.11 கோடிக்கு மேல் கட்டுக்கட் டாக பணம் சிக்கியது. இதனால், வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கீழ் நடைபெறும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரான பி.எஸ்.கே. பெரியசாமியின் கட்டுமான நிறுவனமான பி.எஸ்.கே. நிறுவனத்தில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை புலனாய்வு பிரிவு அலு வலகத்துக்கு புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்த நிறு வனம்தான் சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள கலைவாணர் அரங்கம், அரசு மருத்துவக் கல்லூரி கள், எம்ஜிஆர் .நூற்றாண்டு நினைவு வளைவு போன்ற பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது.
புகாரின் அடிப்படையில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று பல் வேறு குழுக்களாகச் சென்று, பி.எஸ்.கே. நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல்லில் 4 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில், எழும்பூர் எத்தி ராஜ் சாலையில் உள்ள 16 மாடி கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பி.எஸ்.கே. நிறுவன உரிமையாளர் பெரியசாமியின் மகன் அருண்குமார் வசிக்கிறார். இவரது வீடு உட்பட 3 இடங்களில் சோதனை நடந்தது.
நாமக்கல்லில் சோதனை
நாமக்கல்லில் பி.எஸ்.கே. பெரிய சாமியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் நேற்று காலை 9 மணி முதல் வருமானவரித் துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அரசி யல் கட்சி தலைவர்களுக்கு நெருக்க மானவராக கருதப்படும், பி.எஸ்.கே. பெரியசாமியின் பண்ணை வீடு, கொல்லிமலை அடிவாரப் பகுதியான நடுக்கோம்பையில் உள்ளது. அங் கேயே அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த 2 இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல், நாமக்கல் சேலம் சாலை பழனியாண்டி தெருவில் உள்ள பெரியசாமியின் உறவின ரான ‘ஆர்பிஎஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ செல்வகுமார் என்பவருடைய வீட்டி லும் வருமானவரி சோதனை நடத்தப் பட்டது.
மேலும், பி.எஸ்.கே. பெரியசாமி பங்குதாரராக உள்ள தனியார் கல்லூரி யிலும், எருமப்பட்டியில் உள்ள நூற் பாலை மற்றும் அங்குள்ள வீட்டிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. காலை யில் தொடங்கிய சோதனை தொடர்ந்து இரவு வரை நீடித்தது. சோதனை நடத்த இடங்களில் நுழைவாயில், கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக் கப்படவில்லை. அதேபோல உள் ளிருந்து யாரும் வெளியே செல்ல வில்லை. இந்த சோதனையில் ஏராளமான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கைப்பற்றப் பட்ட பொருட்கள் குறித்து வருமான வரித் துறையினர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை,
பைனான்சியர்கள் வீடு
இதற்கிடையே, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக பைனான்சியர்களிடம் சிலர் பணம் திரட்ட முயற்சிப்பதாக வருமானவரித் துறை புலனாய்வு பிரிவு அதிகாரி களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், சென்னையில் உள்ள பைனான்சியர்கள் ஆகாஷ் பாஸ்கரன், சுஜய் ரெட்டி ஆகியோருக்கு தொடர்புடைய 10 இடங்களிலும், திருநெல்வேலியில் ஒரு இடத் திலும் வருமானவரித் துறை அதிகாரி கள் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.
வருமான வரித் துறையினர் நேற்று நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத ரூ.14.54 கோடி ரொக்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதில் பி.எஸ்.கே. நிறுவனத்தில் இருந்து மட்டும் ரூ.13.80 கோடி சிக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பைனான்சியர் சுஜய் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையில் வெளிநாட்டில் ரூ.16 கோடிக்கு முதலீடு செய்துள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.