

ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் அவரின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த நடிகர் ராமராஜன், தற்போது இபிஎஸ்-ஓபிஎஸ் மீதான அதிருப்தியால் பிரச்சாரத்துக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிப்போய் உள்ளார்.
`கரகாட்டகாரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் நடிகர் ராமராஜன், ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினி, கமலுக்கே போட்டியாகத் திகழ்ந்தார். அவர்களுக்கு இணையாக ரசிகர் மன்றங்களும் இருந்தன. அதிமுக அபிமானியான இவர், புகழின் உச்சியில் இருந்தபோதே அதிமுகவில் சேர்ந்து அக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளராக தமிழகம் முழுவதும் வலம் வந்தார்.
ஜெயலலிதாவின் விசுவாசியான இவர், சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரு சேர கவனம் செலுத்த முடியாததால் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவில் சறுக்கினார். ஜெயலலிதா, அவரை அரவணைத்து 1998 மக்களவைத்தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். அங்கு வெற்றிபெற்று மக்களவைக்கும் சென்றார். மக்களவையில் ஒரு முறை விவாதம் நடந்தபோது மைய மண்டபத்துக்குச் சென்று ‘அம்மா வாழ்க, அம்மா வாழ்க’ என்று முழக்கமிட்டு வடமாநில எம்பிகளையே திகைக்க வைத்தார். அதனால், ஜெயலலிதாவுக்கு ராமராஜன் மீது எப்போதுமே தனிப்பாசம் உண்டு.
ஒரு முறை உடல் நலகுறைவாலும் வறுமையாலும் ராமராஜன் வாடியபோது, ஜெயலலிதா அவரது முழு மருத்துவமனைச் செலவையும் ஏற்றார். மேலும், அவரது நிரந்தர வருவாய்க்கு ராமராஜனை பொதுக்கூட்டங்களுக்கு அழைக்கும்படி கட்சியி னருக்கு உத்தரவிட்டார். அந்தளவுக்கு அதிமுகவில் ராமராஜன் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தார். அதற்குப் பிராயச்சித்தமாக நடிகர் ராமராஜன் தேர்தல் நேரத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்வார்.
தேர்தல் இல்லாத நேரத்தில், அதிமுக பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடிகர் ராமராஜன் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் சேர்ந்தார். ஆனால், அவர்கள் ராமராஜனை கவுரவமாக நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் களை கட்டிய நிலையில் நடிகர் ராமராஜனை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை. ஆனால், ராமராஜன் கட்சித் தலைமையை அணுகியதாகவும், அதற்கு அவர்கள் அதற்குச் சரியாக பிடி கொடுக்காததால் விரக்தியடைந்த அவர், பிரச்சாரத்துக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.
இதுகுறித்து அவரது கருத்தை அறிய பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவர் செல்போனை எடுக்கவில்லை.
அவரது நெருங்கிய உறவினரிடம் கேட்டபோது, ஓபிஎஸ்-இபிஎஸ் மீது ராமராஜன் அதிருப்தியால் உள்ளார். ஆனால், அவர் எந்தக் கட்சிக்கும் செல்ல மாட்டார். கடைசி வரைக்கும் அதிமுகவிலேயே நீடிப்பார், என்றார்.
அதிருப்தி ஏன் என்று கேட்ட போது, அது எனக்கும், ராமராஜனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம், அதை வெளியே சொல்ல முடியாது, என்றார். அதிமுக தரப்பில் விசாரித்தபோது, ராமராஜனுக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் அவரைப் பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை, என்றனர்.