

இலங்கை குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான அமைப்பையும், குற்றவாளிகளையும் கண்டுபிடித்து அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகளில் 290 பேர் இறந்துள்ளனர், 500 பேர் காயமுற்றுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொடிய சம்பவத்திற்கு எதிராக தனது வலுவான கண்டனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் தற்கொலைப்படையினரை பயன்படுத்தியும், பயங்கரமான வெடிகுண்டுகளை பயன்படுத்தியும் ஈஸ்டர் ஞாயிறு மாதா கோவில்களில் கூடுகின்ற மக்களை குறிவைத்து தாக்கியும், அதேபோன்று ஹோட்டல்களிலும் நிகழ்ந்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினரை இலக்காக வைத்து மதத்தீவிரவாதத்தால் உந்தப்படுகின்ற பயங்கரவாதம் செயல்படுகிறது என்பதை இத்தாக்குதல் வெளிச்சம்போட்டு காட்டுகின்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கை மக்களோடு தனது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த படுகொலைக்கு காரணமான அமைப்பையும், குற்றவாளிகளையும் கண்டுபிடித்து அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி நம்புகிறது" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.