Published : 01 Apr 2019 09:17 AM
Last Updated : 01 Apr 2019 09:17 AM

குடிசையில்லா தமிழகமாக மாற்றப்படும்: ஓசூர் பிரச்சாரத்தில் துணை முதல்வர் தகவல்

வரும் 2023-ம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும் என ஓசூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓசூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓசூர் ராம்நகரில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்து பேசியதாவது:

தமிழகத்தில் இரண்டு கூட்டணிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஒன்று நல்லவர்கள் கூட்டணி, மற்றொன்று கலவரக் காரர்கள் கூட்டணி. இதில், அதிமுக கூட்டணி நல்லவர்களை கொண்ட கூட்டணியாகும். காங்கிரஸ்-திமுக மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது உருப்படியான தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வரவில்லை. பாழாய்ப்போன சேதுசமுத்திர திட்டத்தை மட்டுமே செயல்படுத்துவதாக கூறி ரூ.40ஆயிரம் கோடியை ஒதுக்கி வீணாக்கினார்கள்.

வரும் 2023-ம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும். அதிமுக 1.50 கோடி தொண்டர்கள் உள்ள பெரிய ஆலமரமாக உள்ளது. புயல், சுனாமி எதுவந்தாலும் அசைக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயிலுக்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அப்போது, ஓசூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் ஜோதி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.பி.முனுசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

கிருஷ்ணகிரியில் பிரச்சாரம்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலை எதிரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி, வெற்றி பெற்றால் மத்திய, மாநில அரசு திட்டங்களை இப்பகுதி மக்களுக்கு பெற்றுத் தருவார். தேர்தலில் நல்லவர்கள் இணைந்து மெகா கூட்டணியை நாங்கள் அமைத்துள்ளோம். காங்கிரஸ், திமுக மற்றும் உதிரி கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளனர். காங்கிரஸ் மத்தியில் ஆண்டபோது அவர்களுடன் கூட்டணியில் இருந்த திமுகவில் 10 அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் தமிழக மக்களுக்காக சொல்லிக் கொள்ளும் அளவு திட்டங்களை நிறைவேற்றவில்லை.

திமுக ஆட்சியின்போது, அப்பாவி மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. கடந்த 2016-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலின்போது, ஸ்டாலின் வண்ண, வண்ண ஆடை அணிந்து மக்களை சந்தித்தார். கரும்புத் தோட்டத்தில் புகுந்தார். சாலையோர டீக்கடையில் டீ குடித்தார். ஆனாலும் அவர் பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 60 லட்சம் மக்களுக்கு ரூ.2000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தும் நாங்கள் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x