Last Updated : 28 Apr, 2019 12:00 AM

 

Published : 28 Apr 2019 12:00 AM
Last Updated : 28 Apr 2019 12:00 AM

ஒலிம்பிக்கிலும் கோமதி சாதிப்பார்

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை மா.கோமதி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஸ்போர்ட்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தபோது எனக்கு உதவி செய்தவர் ராஜாமணி சார்" என்று கூறினார்.

கோமதி குறிப்பிட்ட அந்த ராஜாமணி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். தற்போது, திருச்சி காவல் துறையில் எஸ்பிசிஐடி பிரிவில் தலைமைக் காவலராக உள்ளார்.

கோமதியின் சாதனை குறித்து ராஜாமணி, ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:சிறு வயது முதலே விளையாட்டில் எனக்கு ஆர்வம் அதிகம். கல்லூரிக் கல்வியை சென்னையில் படித்தபோது தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு மாநில அளவிலான 800 மீட்டர், 1,500 மீட்டர், 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று முதலிடமும் பிடித்தேன். காவல்துறையில் இணைந்தபிறகு, காவல்துறையினருக்கான ஓட்டப் பந்தயங்களிலும் முதலிடம் பிடித்துள்ளேன்.

சென்னையில் இருந்து பணியிட மாறுதலில் 2006-ல் திருச்சிக்கு வந்தேன். ஓட்டப் பயிற்சிக்காக திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்துக்கு சென்றபோது, அங்கு ஓட்டப் பயிற்சி மேற்கொண்ட வீரண்ணன் என்பவர் என்னிடம் பயிற்சி பெற விரும்பினார். அவர் மூலம் அறிமுகமான கோமதியும் பயிற்சிக்காக என்னை அணுகினார். தொடர் பயிற்சியால் ஓட்டப் பந்தயங்களில் மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறந்து விளங்கினார் கோமதி. அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கம் வென்றார். இதனால், ஒரு போட்டியில் 2 பிரிவுகளில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை கோமதிக்கு கிடைத்தது.

கோமதி கடின உழைப்பாளி. ஓய்வு என்பதை அறியாதவர். பயிற்சிக்கு நான் விடுப்பு அளித்தாலொழிய அவராக ஒரு நாளும் விடுப்பு எடுத்ததே இல்லை. அந்தளவுக்கு ஓட்டப் பந்தயத்தில் ஆர்வமுடன் இருந்தார். குடும்பம் வறுமையில் இருந்ததால் அவருக்கு ஒரு சிலர் உதவி செய்தனர். உலக தடகளம், ஒலிம்பிக் போட்டிகளிலும் கோமதி சாதனை புரிவார்.

என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் ரயில்வே, ராணுவம், காவல் துறை, விமானப் படையில் பணியாற்றுகின்றனர். கோமதியைப் போல நிறைய பேரை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x