Published : 04 Sep 2014 09:30 AM
Last Updated : 04 Sep 2014 09:30 AM

வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்டோர் மீண்டும் உண்ணாவிரதம்: கல்விச் சான்றிதழ்களை ஒப்படைக்கப்போவதாக அறிவிப்பு

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை யால் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் புதன்கிழமை மீண் டும் உண்ணாவிரதம் இருந்தனர். தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்போவதாக அவர்கள் அறிவித்தனர்.

அரசுப் பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கான பணிநியமன கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் வேலை கிடைக்காத ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 1-ம் தேதி சென்னையில் பேரணி நடத்தப்பட்டபோது 4 ஆசிரியர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

டிபிஐ-யில் உண்ணாவிரதம்

இந்த நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப் பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 100 பேர் சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். இந்த வளாகத்தில் உள்ள ஈ.வி.கே.சம்பத் மாளிகை கட்டிடத்தில்தான் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து டிபிஐ வளாகத்தில் காலை 10 மணியளவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். காவல்துறை வாகனங்களும் வளாகத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தயார் நிலையில் நின்றன. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

சான்றிதழ்களை ஒப்படைக்க முடிவு

இன்று முதல் 5-ம் தேதி வரை தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்துசெய்துவிட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும்.

எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்காவிட்டால் எங்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்களையும், தேர்தல் அடையாள அட்டையையும் 5-ம் தேதி அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஒப்படைக்க முடிவுசெய்துள்ளோம். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுத்தும் வேலை கிடைக்காத நிலையில், இந்த சான்றிதழ்களால் எங்களுக்கு என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x