Published : 03 Apr 2019 07:10 PM
Last Updated : 03 Apr 2019 07:10 PM

சென்னை அண்ணா சாலை இருவழி பாதையாகிறது: மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததால் விரைவில் திறப்பு - வாகன ஓட்டிகள் நிம்மதி

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக 7 ஆண்டுகளுக்கு முன் ஒருவழியாக்கப்பட்ட அண்ணாசாலை, மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததால் மீண்டும் இருவழியாக்கப்பட உள்ளது. இதனால் வாகன் ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தென் மாவட்டங்களிலிருந்தும், வட மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்குள் நுழைய இரண்டு முக்கிய சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒன்று அண்ணாசாலை, மற்றொன்று பூநதமல்லி நெடுஞ்சாலை (பெரியார் ஈவேரா நெடுஞ்சாலை).

சென்னையின் போக்குவரத்து நெரிசலை பொதுமக்களின் போக்குவரத்துப் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்க திட்ட அறிக்கை 2007-08-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

இரண்டு தொகுப்புகளாக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியது. முதல் தொகுப்பு வண்ணாரப்பேட்டையில் தொடங்கி விமான நிலையத்தில் முடிகிறது. இதன் மொத்த நீளம்: 23.085 கி.மீ. இதில் தரைக்கடியில் 14.3 கி.மீ. செல்கிறது.

இதில் உள்ள ஸ்டேஷன்கள் விவரம்:

வண்ணாரப்பேட்டை - மண்ணடி - சென்னை கோட்டை - சென்னை சென்ட்ரல் - அரசு வளாகம் - எல்.ஐ.சி - ஆயிரம் விளக்கு - அண்ணா மேம்பாலம் - தேனாம்பேட்டை - நந்தனம் - சைதாப்பேட்டை - கிண்டி - ஆலந்தூர் - மீனம்பாக்கம் - சென்னை பன்னாட்டு விமான நிலையம்.

இரண்டாவது தொகுப்பு சென்னை சென்ட்ரலிலிருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலையில் முடிகிறது. இதன் மொத்த நீளம்: 21.961 கி.மீ. இதில் 9.7 கி.மீ. தரைக்கடியில் செல்கிறது.

இதில் உள்ள ஸ்டேஷன்கள் விவரம்:

சென்னை சென்ட்ரல் - சென்னை எழும்பூர் - வேப்பேரி - ஷெனாய் நகர் - அண்ணா நகர் - திருமங்கலம் - அரும்பாக்கம் - சென்னை புறநகர் பேருந்து நிலையம் - வடபழனி - அசோக் நகர் - ஈக்காட்டுத்தாங்கல் - ஆலந்தூர் - பரங்கி மலை.

இந்தப்பணிகளுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலைகள் ஒருவழிப்பாதையாக்கப்பட்டது. அண்ணா சாலையில் ஒவ்வொரு பணியாக முடிய முடிய திறக்கப்பட்டு வந்தது. அதிக நெரிசலாக நந்தனம் பகுதியில் இருந்தது. அதுவும் திறக்கப்பட்டது.

ஆனால் அண்ணா சிலையிலிருந்து ஜெமினி நோக்கி செல்லும் பாதை மூடப்பட்டு, அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சிக்கு முன்புறம் ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில் திருப்பிவிடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ராயப்பேட்டை மணிகூண்டுவரை சுற்றிச் சென்று அங்கிருந்து ஒயிட்ஸ் சாலை சத்யம் தியேட்டர் வழியாக அண்ணா சாலையில் இணைந்தனர்.

இதனால் கூடுதலாக 2.5 கிலோ மீட்டர் சுற்றி செல்லவும் போக்குவரத்து நெரிசலிலும் சிக்கினர். காலை, மாலை பீக்ஹவர்ஸில் மிகவும் நெரிசலால் சிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

ஒரு கட்டத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கூட திறக்கப்பட்டு விட்டது, ஆனால் அண்ணா சாலையில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணியை சரிவர செய்யாததால் மீண்டும் புதிதாக பணி தொடங்கி கூடுதல் கால அவகாசம் ஆனது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிலை நீடித்தது.

இதனால் வாகன ஓட்டிகள் சுற்றிச் செல்லும் நிலை தொடர்ந்தது. இந்நிலையில் மீதமுள்ள 10 கி.மீ. பணியும் நிறைவு பெற்றது. இதையடுத்து வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை பயணம் செய்ய அனைத்து வழித்தடங்களும் தயாரான நிலையில் இதற்கான சேவை கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கியது.

மெட்ரோ ரயில் சேவை தொடங்கினாலும், அண்ணா சாலையில் பணிகள் நிறைவுப்பெறாததால் அண்ணா சாலை தொடர்ந்து ஒரு வழிப்பாதையாகவே இருந்தது. அண்ணா சாலை எல்.ஐ.சி அருகேயும், ஸ்பென்சர் அருகிலேயும் சாலையில் சில பணிகள் முடியாததால் சாலை திறக்கப்படாமலே இருந்தது.

இந்நிலையில் சாலைப்பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு ஏப்ரல் இறுதி வாரத்தில் நெடுஞ்சாலைத்துறையிடம் அண்ணா சாலை ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இதனால் வரும் மே மாதம் முதல்வாரத்தில் அண்ணா சாலை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். 2.5 கிலோ மீட்டர் கூடுதலாக சுற்றப்படுவது தவிர்க்கப்படும், சாலை வசதி சரி இல்லாத ஜிபி சாலையில் பயணிப்பதும் இனி இல்லை என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x