Last Updated : 14 Apr, 2019 12:00 AM

 

Published : 14 Apr 2019 12:00 AM
Last Updated : 14 Apr 2019 12:00 AM

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு: இணையதளத்தில் நாளை ஹால்டிக்கெட்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் அரசு மற்றும்தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-10-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கி30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையில் 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் வரும்15-ம் தேதி (நாளை) பதிவேற்றம் செய்யப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். . நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:நாடுமுழுவதும் நீட் தேர்வு 154 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் சென்னை, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நடைபெறுகிறது. ஆங்கிலம், இந்தி, உருது மொழியில் நீட் தேர்வு அனைத்து நகரங்களிலும் நடைபெற உள்ளது. ஆங்கிலம் - அசாமி மொழியில் அசாம் மாநிலத்திலும், ஆங்கிலம் - வங்காளம் மொழியில் மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலத்திலும், ஆங்கிலம் - குஜராத்தி மொழியில் குஜராத், டாமன் டையூ மற்றும் தாத்ரா நாகர் அவேலியிலும், ஆங்கிலம் - கன்னடம் கர்நாடகா மாநிலத்திலும் நடைபெறுகிறது.

ஆங்கிலம் - மராத்தி மொழியில் மகாராஷ்டிரா மாநிலத்திலும், ஆங்கிலம் - ஒடியா மொழியில் ஒடிசா மாநிலத்திலும், ஆங்கிலம் - தெலுங்கு மொழியில் ஆந்திராமற்றும் தெலங்கானா மாநிலத்திலும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ்மொழியில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு தேர்வு மையங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x