Published : 12 Apr 2019 05:50 PM
Last Updated : 12 Apr 2019 05:50 PM

பிரதமர் மோடி காவலாளி அல்ல: ஸ்டாலின் விமர்சனம்

பிரதமர் மோடி காவலாளி அல்ல களவாணி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை), சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

"பாஜகவின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்க வேண்டும் என்றால், ஒன்று ஆட்சியில் இருந்த ஐந்து வருடத்தில் செய்த சாதனைகளை பெருமையோடு மகிழ்ச்சியோடு பட்டியல் போட்டு காட்டி இருக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வருகின்ற பொழுது, என்னென்ன பணிகளை செய்யப் போகின்றோம் என்பதை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர் மாறாக, கனவுகளை எல்லாம் அந்தத் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருக்கின்றார்கள்.

மாநிலங்களின் உரிமைகள் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றதா? நீட் தேர்வு பற்றி அந்தத் தேர்தல் அறிக்கையில் ஒரு வரி இருக்கின்றதா? வேலை வாய்ப்பு பற்றி ஏதேனும் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கின்றார்களா?

2030-க்குள் இந்தியாவை பொருளாதார நாடாக ஆக்குவோம். எப்பொழுது என்றால் 2030-ல். இப்பொழுது 2019 ஆம் ஆண்டு. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக ஆக்குவோம். இப்படியே வெரும் கனவுகளாக தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டிருக்கின்றனர்.

மோடி 'நான் ஒரு ஏழைத்தாயின் மகன் ' என்று சொல்கின்றார். ஏழைத் தாயின் மகனாக இருந்தால் விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்திருப்பாரா? ஏழைத்தாயின் மகனாக இருந்தால் ஏழைகள் பரம ஏழைகளாக மாறிக் கொண்டு இருக்கின்றார்கள். ஏழைத்தாயின் மகனின் ஆட்சியில் விஜய் மல்லையா, லலித் மோடி, கார்ப்பரேட் கம்பெனிகள், அவர்கள் எல்லோரும் கோடி கோடியாக கொள்ளை அடித்துக்கொண்டு போகின்ற காட்சி. அதற்கு காவலாளியாக இருக்கின்றார். மோடியே சொல்கின்றார் நான் ஒரு காவலாளி என்று.

அவர் காவலாளி அல்ல களவாணி. களவாணி தான் ஊழல்வாதிகளுக்கு, கொலைகாரர்களுக்கு, கொள்ளைக்காரர்களுக்கு, காவல் காத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு களவாணியாக பிரதமர் மோடி விளங்கிக் கொண்டு இருக்கின்றார்.

ராகுல் காந்தி மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று ஒரு விமர்சனத்தை மோடி வைக்கிறார். மன்னர் குடும்பத்தைச் சார்ந்து இருக்கக் கூடியவர் என்பது உண்மைதான். அந்த மன்னர் குடும்பத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய ராகுல் காந்தி தான், ஏழைகளின் உள்ளம் அறிந்து மாதம் 6,000 ரூபாய் என ஒரு ஆண்டுக்கு 72,000 ரூபாய் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கக்கூடியவர்களுக்கு வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற அந்த உணர்வோடு திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கின்றார்.

மன்னர் குடும்பத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய ராகுல் காந்தி தான் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, அதேபோல் கடன் கட்டமுடியாத விவசாயிகளுக்கு குற்ற வழக்கு கிடையாது அவை அனைத்தும் ரத்து என அறிவித்து இருக்கிறார்.

'டீ ஆற்றினேன்' என்று மோடி சொல்கின்றார். அது கேவலம் இல்லை, அருமையான தொழில் தான். ஆனால் டீ ஆற்றிக் கொண்டு இருந்தவர்கள் இன்றைக்கு ஏழைகளைப் பற்றி சிந்திக்கின்றீர்களா? டீ ஆற்றிக் கொண்டிருந்த பிரதமர் மோடி யாரைப் பற்றிச் சிந்திக்கின்றார்?

பணக்காரர்களை கோடீஸ்வரர்களை கொள்ளையடித்து வைத்திருப்பவர்களை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருப்பார். இவை தவிர மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை"

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x