Published : 01 Apr 2019 09:15 AM
Last Updated : 01 Apr 2019 09:15 AM

முல்லைவேந்தனை சமாதானம் செய்த உதயநிதி ஸ்டாலின்

தருமபுரி தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை, உதயநிதி ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசி, அவரை தேர்தல் பணிக்கு அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்க சென்னை சென்ற முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அதிருப்தி அடைந்த அவர் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் கம்பைநல்லூர் அடுத்த செங்குட்டை கிராமத்தில் உள்ள அவரது நிலத்தில் விவசாய பணிகளில் முழு நேரம் ஈடுபட்டு வருகிறார்.

அரசியல் மற்றும் தேர்தல் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்ட முல்லைவேந்தன் தேர்தல் பணியில் இருந்து விலகி இருப்பது திமுகவுக்கு பலகீனத்தை ஏற்படுத்தும் என திமுக தொண்டர்கள் வேதனை அடைந்தனர். இதை யடுத்து, அவரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த துர்கா ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் முல்லைவேந்தன் நெகிழ்ந்தபோதும், துர்கா ஸ்டாலினிடம் பேசவில்லை.

இந்நிலையில், பிரச்சார பயணமாக தருமபுரி வந்த உதயநிதி ஸ்டாலின் தொலைபேசி மூலம் முல்லைவேந்தனிடம் பேசி சமாதானம் செய்துள்ளார்.

இதுகுறித்து முல்லை வேந்தனுக்கு நெருக்கமான சிலர் கூறும்போது, “கடந்த 29-ம் தேதி இரவு தருமபுரியில் தங்கிய உதயநிதி ஸ்டாலின், முல்லைவேந்தனை தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது “பாப்பி ரெட்டிப்பட்டி தொகுதிக்கு இனி வேட்பாளரை மாற்ற முடியாது. தேர்தலுக்கு பிறகு அனைத்தையும் பேசி சரிசெய்து கொள்ளலாம். பொறுப்பு வழங்குவது தொடர்பாகவும் கூட பேசலாம். இப்போது தேர்தல் பணிக்கு திரும்புங்கள்” என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதற்கு பதில் அளித்த முல்லைவேந்தன், “தேர்தலில் வாய்ப்பளிக்காதது பற்றி வருத்தப் படவில்லை. பொறுப்புக்கும் நான் வர ஆசைப்படவே இல்லை. உங்கள் தாத்தாவிடம் உள்ள பக்குவத்தை உங்களிடம் காண்கிறேன். இப்படியே கட்சியினரை அரவணைத்து செல்லுங்கள். வாய்ப்பிருந்தால் தேர்தல் களப்பணிக்கு வருகிறேன். இல்லையெனில் என் ஆதரவாளர்கள் தீவிரமாக பணியாற்றுவார்கள். திமுக-வுக்கு துரோகம் செய்ய மாட்டேன்” என முல்லைவேந்தன் பதில் அளித்ததாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x