

எட்டுவழிச்சாலை திட்டத்தினால் விவசாயப் பெருங்குடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விவசாய நிலங்கள் முன்னறிவிப்பின்றி கைப்பற்றப்பட்டன. இதை எதிர்த்து பாமக, எட்டுவழிச்சாலை எதிர்ப்புக் குழு உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. கடந்த பல மாதங்களாக நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் தீர்ப்பு இன்று வெளியானது.
தீர்ப்பில் எட்டுவழிச்சாலை திட்ட அரசாணைக்கு தடை விதிக்கப்பட்டு திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். தேர்தல் நேரம் என்பதால் அரசுத் தரப்பில் மவுனம் காக்க சில அமைச்சர்கள் உச்ச நீதிமன்றம் செல்வோம் என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எட்டுவழிச்சாலை எதிர்ப்புக் குழு இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''அதிமுக அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை அமைச்சர்களை அடக்கி வைக்க வில்லையென்றால் நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் அதிமுக-பாஜக கூட்டணியை தோல்வி அடையச் செய்வோம்.
உயர் நீதிமன்றம் எட்டுவழிச்சாலைக்கு எதிராக ஆணை பிறப்பித்திருக்கும் சூழலில் விவசாயிகள் பெருமகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இதைக் காணப் பொறுக்காத அதிமுக அமைச்சர்கள் இத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று கூறியிருக்கிறார்கள்.
அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது நாவை அடக்க வேண்டும். மக்கள் விருப்பத்திற்கு எதிராக மேல்முறையீடு பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இவரை நாவடக்கச் சொல்லி அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அறிவுறுத்த வேண்டும்.
இல்லையெனில் விவசாயிகளின் வலிமை வரும் தேர்தல்களில் தெரியும். அமைச்சருக்கு நாவடக்கம் தேவை, இல்லையெனில் வரும் தேர்தலில் பாடம் கற்பிப்போம்''.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.