Published : 11 Apr 2019 10:56 AM
Last Updated : 11 Apr 2019 10:56 AM

பானை செய்யும் பட்டதாரி!- அரசின் விருது பெற்ற மண்பாண்டக் கலைஞர்

பட்டப் படிப்பு முடித்திருந்தாலும், குழந்தை முதல் அருகில் இருந்து பார்த்து, ரசித்து, கற்றுக் கொண்ட  மண்பாண்டத் தொழிலைத் தொடர விரும்பிய இளைஞரின் முயற்சிக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. முதுகலைப் பட்டதாரியான அவரது மனைவியும்  உதவி செய்ய, மண்பாண்டத் தயாரிப்பு சக்கரத்தை விட வேகமாக நகர்கிறது அவர்களது வாழ்க்கைச் சக்கரம்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முகாசி அனுமன்பள்ளியைச் சேர்ந்த சண்முகம்-மல்லிகா தம்பதியின் மகன் கனகராஜ். பி.ஏ., பி.எட்.  படித்த இளைஞர். எல்லோரையும்போல, படிப்புக்கேற்ற பணியைத் தேடலாம் என்ற எண்ணம் கனகராஜுக்கும் இருந்தது. ஆனால், சில மாதங்களிலேயே அந்த வேலை கசந்துபோனது. தாத்தா, அப்பா ஆகியோர்,  சுழலும் சக்கரத்தின் அருகில் நின்று, அழகழகாய் உருவாக்கிய மண்பாண்டங்களே இவரது கவனம் முழுவதும் இருந்துள்ளது. இதனால்,  முழுநேர மண்பாண்டத் தொழிலாளியாக மாறிய கனகராஜ், தற்போது 25 பேருக்கு மண்பாண்டம் தயாரிக்கும் வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து நிற்கிறார். அவரை சந்தித்தோம்.

“பரம்பரையாக மண்பாண்டம் செய்வதே எங்கள் குடும்பத் தொழில். நான் பள்ளிக்குச் செல்லும் காலத்தில் தொடங்கி தினமும் மண்பாண்டம் தயாரிப்பதைப் பார்த்து, ரசிக்கத் தொடங்கினேன். ஆனால், கல்லூரிப் படிப்பு,  பின்னர் பி.எட். படிப்பு என என்னை வேறு தளத்துக்கு கொண்டு செல்ல என் பெற்றோர் விரும்பினர். அதனால், படிப்பில்தான் ஆர்வத்தை செலுத்த வேண்டியிருந்தது. நான் ரசிக்கும் மண்பாண்டத் தொழிலைச் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தது வருத்தமாய் இருந்தது. படித்து முடித்து விட்டு சில மாதங்கள் வேலைக்கு சென்றேன்.

`பட்டப் படிப்பு படித்தால் மண்பாண்டத் தொழில் செய்யக் கூடாதா?’ என்ற கேள்வி தொடர்ந்து எழுந்ததால், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி மண்பாண்டத் தொழிலுக்கு வந்துவிட்டேன். 12 வருடங்களைக் கடந்து  விட்டேன்” என்றார்.

புதிய பொருட்களும்...கண்காட்சியும்...

சுவாமிகளுக்கான உருவாரம், மண் குதிரை, கோயில் திருவிழாக்களுக்கு பூவோடு, தண்ணீர் பானையில் தொடங்கி மயானத்தில் பயன்படுத்தும் மண் கலயம் வரை, கனகராஜின் தயாரிப்புகள் தேவைக்கு ஏற்றபடி மாறி வந்துள்ளன. மண் பாண்டங்களில் குக்கர், தண்ணீர் குடுவை, தயிர்சட்டி, அணையா விளக்கு உள்ளிட்ட புதிய பொருட்களைத் தயாரித்ததுடன், அவற்றை கண்காட்சிகள் மூலம் விற்பனை செய்யவும் தொடங்கியுள்ளார்.

கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் அரசு நிறுவனமான பூம்புகாருக்கு, தனது படைப்புகளை விற்பனைக்காக கொடுக்கத் தொடங்கினார் கனகராஜ். மண்பாண்டப்  பொருட்களின் தேவை அதிகரிக்கவே, இப் பணியைச் செய்யும் இதர தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார் கனகராஜ்.

பூம்புகார் அளித்த விருது!

கைவினைப் பொருட்களை சிறப்பாக வடிவமைக்கும் கைவினைஞர்களுக்கு, பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவிக்கிறது.  தச்சு, மரச்சிற்பம், கண்ணாடி சிற்பம், விளக்கு, ஐம்பொன் சிலை என பல பிரிவுகளில் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, இம்முறை மண்பாண்டக் கலைஞர் கனகராஜுக்கு கிடைத் துள்ளது.

சென்னையில் நடந்த விழாவில், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், இந்த விருதை  வழங்கியுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் என பலரும் கனகராஜுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கனகராஜின் மனைவி ரம்யா, எம்.ஏ. பி.எட்.  பயின்றவர். கணவரைப் போலவே அவரும் மண்பாண்டத் தொழிலை நேசித்து, கணவருக்கு உதவி வருகிறார். கொங்கு மண்டலத்தில் உள்ள கல்லூரிகளில் தொடங்கி, பல்வேறு அமைப்புகளின் பொங்கல் கொண்டாட்டங்களில் ரம்யா வடிவமைத்த வண்ண, வண்ண பானைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், களிமண்ணால் செய்யப்பட்ட, பெண்கள் அணியும் வண்ண அணிகலன்களையும் தயாரித்து வருகிறார் ரம்யா.  இவற்றைக் கொண்டு கல்லூரிகளில் கண்காட்சி நடத்தி, மாணவ, மாணவிகளிடையே மண்பாண்டம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

மண்பாண்டத் தொழிலை விரிவுபடுத்த வேண்டும், புதுமைகளை செய்ய வேண்டும் என விரும்பும் கனகராஜ், கர்நாடக மாநிலம் பெல்ஹாமில் செயல்படும் மத்திய அரசு நிறுவனத்தில் மண் ஆராய்ச்சி தொடர்பான பட்டயப் படிப்பை படிக்க விண்ணப்பித்துள்ளார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையின்போது மண்பாண்டம் செய்வதற்கான பயிற்சியை அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

“மண்பாண்டம் செய்வதற்காக ஈரோடு மாவட்டத்தில் அவல்பூந்துறை, வெள்ளோடு குளங்களில்  மண் எடுக்க, குறிப்பிட்ட காலங்களில் அனுமதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை காரணமாக மண்பாண்டப்  பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், செங்கல் சூளை போன்றவற்றுக்கு மண் வழங்குவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மண்பாண்டத் தொழில் செய்யும் நிலையில், தேவைக்கேற்ப களிமண் கிடைப்பதில்லை.

மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு என பிரத்யேக கூட்டுறவு சங்கம் அமைத்து,  அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அரசு தற்போது நல வாரியம் மூலம் மழைக்கால நிவாரணமாக ரூ. 5,000 வழங்குகிறது. மேலும், மண்பாண்டம் செய்ய, மின்சாரத்தால் இயங்கும் சக்கரம் வழங்கப்படுகிறது.

விவசாயிகள், நெசவாளர்களைப்போல, மண்பாண்டத் தொழில் செய்பவர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது, ரயில்களில் மண் குவளையில் தேநீர் வழங்கும் நடைமுறை இருந்தது. மீண்டும்,  அந்த நடைமுறையை அமலுக்குக் கொண்டு வர வேண்டும்” என்றார்  கனகராஜ்.

6 மாதங்களில் கற்றுக் கொள்ளலாம்...

“விழாக்களில், பிளாஸ்டிக் குவளைகளுக்குப்  பதிலாக மண் குவளைகளில் நீர் மற்றும் குளிர்பானம் வழங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மண்ணைக் காலில்போட்டு மிதித்து பதமாக்குவதற்குப் பதிலாக, மண் அரவை இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. சிறிய அளவிலான குவளைகள், பொம்மைகளைச்  செய்ய அச்சு இயந்திரங்களும் பயன்பாட்டில் உள்ளன.

இந்த தொழிலில் ஆர்வம் இருந்தால் 6 மாதத்தில் கற்றுக்கொள்ள முடியும். தற்போது நான் 25 பேருக்கு மண்பாண்டம் செய்ய கற்றுக் கொடுக்கிறேன். இந்த எண்ணிக்கை 20 ஆயிரமாக மாற வேண்டும் என்பதே என் விருப்பம். இதை  லாப நோக்கத்துக்காகச் சொல்லவில்லை. இந்த தொழில் அழிந்து போய்விடக்கூடாது என்பதற்காக, இந்த இலக்கை குறிப்பிடுகிறேன்”  என்று கூறும் கனகராஜ், “எவ்வளவு பெரிய பணக்காரர் என்றாலும், அவரது இறுதிநாளில் மண்பானைதான்கூட வரும். அதனால், இந்த தொழிலைச் செய்பவர்களை பெருமைக்குரியவர்களாக மக்கள் கருத வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறி நமக்கு விடைகொடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x