

பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் பேரன் படிக்கும் பள்ளியின் விளையாட்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு உதகை வந்தார். கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மக்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் கடும் வெயிலில் காத்திருந்தனர். கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது ஆனால், 12.15 மணி வரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை.
இந்நிலையில், உதகை அருகே பாலாடாவில் உள்ள தனது பேரன் படிக்கும் பள்ளியின் விளையாட்டு விழாவில் காலை ஓபிஎஸ் பங்கேற்றார். பின்னர் கூடலூர் புறப்பட்டார். பிரச்சார கூட்டத்துக்கு வந்த மக்கள் 3 மணி நேரம் வெயிலில் காத்திருந்தனர். ஒரு வழியாக துணை முதல்வர் 12.30 மணிக்கு கூடலூர் வந்தடைந்தார்.