

துளசி கூட வாசம் மாறினாலும் மாறும்; தவசி வார்த்தை மாறமாட்டார் என்று பிரச்சாரத்தின்போது விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் உருக்கமாகத் தெரிவித்தார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் அழகர்சாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் சிவகாசியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ''தேர்தலின் போது கூட்டணி என்பது வரும், போகும். ஆனால் விஜயகாந்தின் தோரணை என்றுமே மாறாது.
மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் வந்தால்தான், தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும். அதிமுக ஆட்சியில் எங்கேயாவது ரவுடியிஸம் தலைவிரித்து ஆடியதா? ஆனால் திமுக ஆட்சியில் எத்தனை ரவுடிகள் இருந்தனர்? இதையெல்லாம் நீங்கள் சிந்திக்கவேண்டும்.
துளசி கூட வாசம் மாறினாலும் மாறும். ஆனால் எங்கள் தவசி வார்த்தை மாறமாட்டார். கேப்டனின் தோரணை எப்போதும் தெய்வத்தோடும் மக்களோடும்தான்'' என்றார் விஜய் பிரபாகரன்.