Published : 29 Apr 2019 09:06 AM
Last Updated : 29 Apr 2019 09:06 AM

விற்கப்பட்ட 4 குழந்தைகள் அடையாளம் கண்டுபிடிப்பு; சிறார்களை தவறான வழியில் பயன்படுத்தினரா என விசாரணை

குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் 4 குழந்தைகளை தனிப்படை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் காட்டுக்கொட்டாய் வள்ளியம்மாள் நகரைச் சேர்ந்தவர் அமுதா (எ) அமுதவள்ளி (50). அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது கணவர் ரவிச்சந்திரன் (55). அமுதவள்ளி, குழந்தைகளை பல லட்சம் ரூபாய் மதிப்பில் விலைபேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் கொல்லிமலை, ராசிபுரம், சேலம், தருமபுரி பகுதியில் உள்ள குழந்தைகளை வாங்கி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியினருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

8 குழந்தைகளை விற்பனை செய்ததாக போலீஸ் விசா ரணையின்போது அமுதவள்ளி தெரிவித்துள்ளார். மேலும், இவருக்கு உடந்தையாக செயல் பட்ட கொல்லிமலை பவர்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்கள் டி. நிஷா (எ) ஹசீனா (26), என். பர்வீன் (37), எம். அருள்சாமி (48) உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் 13 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே கைதான அமுதவள்ளி உள்ளிட்டோர் அளித்த தகவலின் அடிப்படையில் குழந்தைகளை வாங்கிச் சென்றவர் களில் சிலரை, தனிப்படை போலீ ஸார் அடையாளம் கண்டுள்ளனர். எனினும், அக் குழந்தைகளை சம்பந்தப்பட்ட வளர்ப்பு பெற் றோரிடம் இருந்து மீட்பதில் சிக்கல் நிலவுவதாக தனிப்படை போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறுகையில், கைதானவர்கள் அளித்த தகவலின்படி திருநெல்வேலி, கோவை, மதுரை மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்ட 4 குழந்தைகள் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அக்குழந்தைகள் வளர்ப்பு பெற்றோரை, சொந்தப் பெற்றோராக நினைத்துள்ளனர். அக்குழந்தைகள் சுமார் 8 வயதை எட்டியுள்ளனர். இச்சூழலில் அக்குழந்தைகளை வாங்கிய பெற்றோரை கைது செய்வது, குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு என, சட்டரீதியான நடவடிக்கை எதை செய்தாலும், குழந்தையின் மனநிலை, எதிர்காலம் பாதிக்கும்.

குழந்தைகள் நலச்சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே இதை பொறுமையாகத் தான் கையாள வேண்டும். அதே வேளையில் குழந்தைகளை வாங்கிச் சென்றோர், அக்குழந்தையை தவறான வழிகளில் பயன்படுத்தியுள்ளனரா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு கூறுகையில், குழந்தை விற்பனை விவகாரம் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை களை விற்பனை செய்த நபர்கள், அக்குழந்தைகளை வாங்கிய நபர்களுக்கு முறையாக தத்தெடுப்பது போல் ஆவணங்கள் தயார் செய்து வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.

அதை நம்பி வாங்கிய நபர்கள், சம்பந்தப்பட்ட ஆவணங்களை கேட்கும்போது பிரச்சினை வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என உறுதியளித்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளை வாங்கிச் சென்ற நபர்கள் குழந்தைகளை தவறான வழிகளில் பயன்படுத்தி யுள்ளனரா என, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.

தாராபுரத்தில் விசாரணை

தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், திருப்பூர் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

கடந்த 2014-ம் ஆண்டு சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை, இலங்கையைச் சேர்ந்த தம்பதிக்கு ரூ.8 லட்சத்துக்கு அமுதவள்ளியின் வீட்டில் வைத்து விற்பனை செய்யப்பட்டதாகவும், அந்த தம்பதிக்கு, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாக சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும், நேற்று தகவல் பரவியது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸார் கூறும்போது, ‘இந்த சம்பவம் 2014-ம் ஆண்டில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனை உரிமையாளர், சென்னையில் உள்ளார். இதனால் மருத்துவமனை மேலாளர், மருத்துவர், செவிலியர்களிடம் விசாரிக்கப்பட்டது. உரிமையாளர் வந்த பிறகே ஆவணங்களைச் சரிபார்க்க இயலும்’ என்றனர்.

இதே புகாரின்பேரில் ஓரிரு தினங்களில் தாராபுரத்தில், நாமக்கல் மாவட்ட தனிப்படை போலீஸார் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக, போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x