Published : 18 Apr 2019 01:15 PM
Last Updated : 18 Apr 2019 01:15 PM

வேலூரில் தேர்தல் ரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது; வாக்களித்த பின்னர் பிரேமலதா பேட்டி

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா விஜயகாந்த், இரு மகன்கள் என குடும்பத்துடன் வாக்களித்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "வாக்குச்சாவடிகள் சீராக அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் நல்லமுறையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் இன்றைக்கு இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையத்திற்கு தேமுதிக சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒருசில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என செய்திகள் வந்துள்ளன. அதனை துரித முறையில் சரிசெய்ய தேர்தல் ஆணையம் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது. மதுரையில் இரவு 8 மணி வரை நேரம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

எங்களின் கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவை அளிப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நாளை நமதே நாற்பதும் நமதே என்ற வகையில் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அதுமட்டுமல்லாமல், 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் எங்கள் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்" என தெரிவித்தார்.

இதையடுத்து, வருமான வரித்துறை ரெய்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த் பிரேமலதா, "வருமான வரித்துறை ரெய்டு தகவலின் அடிப்படையில் தான் நடைபெறுகிறது. பழிவாங்கும் நோக்கம் ஏதும் இல்லை. ரெய்டு நடைபெறும் இடங்களில் கோடிக்கணக்கான பணம் பிடிபடுகிறது. இது ஜனநாயகத்துக்கே ஒரு தலைக்குனிவு. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை விட அவர்கள் அமைதியாக இருக்கலாம்" என தெரிவித்தார்.

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, "இது கண்டிக்கத்தக்கது. யார் தவறு செய்தார்களோ அவர்களுக்குத் தான் தண்டனை கொடுக்க வேண்டும். அதைவிடுத்து தேர்தல் ரத்து என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு செய்த கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அங்கு எப்போது தேர்தல் நடந்தாலும் ஏ.சி. சண்முகம் வெற்றி பெறுவார்",என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x