Published : 12 Apr 2019 03:57 PM
Last Updated : 12 Apr 2019 03:57 PM

கணவர் மரணத்தில் மர்மம்; மறு விசாரணை வேண்டும்: சாதிக்பாட்சா மனைவி குடியரசுத் தலைவரிடம் மனு

சாதிக்பாட்சா மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது மரணம் குறித்து மறு விசாரணை நடத்த வேண்டும். ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோரை விசாரிக்க வேண்டும் என சாதிக்பாட்சாவின் மனைவி குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்.

சென்னை தி.நகரில் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற பெயரில்  ரியல் எஸ்டேட் நிறுவனம்  நடத்தி வந்தவர் சாதிக்பாட்சா. இவருக்கு ரேஹா பானு என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 2ஜி வழக்கு உச்சத்தில் இருந்த நேரத்தில் சாதிக்பாட்சா வீட்டிலும் 2010-ம் ஆண்டு சிபிஐ சோதனை செய்தது. சோதனை நடந்த சில மாதங்களில் சாதிக்பாட்சா திடீரென தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வெளியானது.

சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அப்போது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி விசாரணை கேட்டன. சாதிக்பாட்சாவின் மனைவி மற்ற உறுப்பினர்களிடமும் விசாரணை நடந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் சாதிக் பாட்சா நினைவு தினத்தை ஒட்டி வழக்கம்போல் அவர் மனைவி ரேஹா பானு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார். அதற்கு சில நாள் கழித்து அவர் இன்னோவா காரில் துரைப்பாக்கம் சென்று கொண்டிருந்தபோது பள்ளிக்கரணை அருகே அவரது கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடந்தினர்.

இதையடுத்து தன்னைத் தாக்கவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என சாதிக்பாட்சாவின் மனைவி ரேஹா பானு காருடன் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் அளித்தார். இந்நிலையில் சாதிக்பாட்சா மரணம் மற்றும் தனது குடும்பத்தினருக்கு தொடர் அச்சுறுத்தல், தன்னைக் கொலை செய்ய சதி என அடுக்கடுக்கான புகார் ஒன்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி சாதிக்பாட்சா மரண விசாரணையை மீண்டும் தொடங்க கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்த அவரது புகாரில் கூறியிருப்பதாவது:

''எனது கணவர் சாதிக்பாட்சா 2003-ம் ஆண்டு கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். அது நன்றாக வளர்ச்சி அடைந்தது. எனது கணவரும், ஆ.ராசாவும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் நல்ல பழக்கம். இதையடுத்து 2006-ம் ஆண்டு எனது கணவரின் நிறுவனத்தில் ஆ.ராசா முதலீடு செய்தார்.

ஆ.ராசா மீது என் கணவர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் ஆ.ராசா தனது சகோதரியின் மகன் பரமேஷ்குமார் என்பவரையும், அவரது மனைவியையும் இயக்குநர்களாக நியமிக்க கேட்டுக்கொண்டார். அதன்படி இணைக்கப்பட்ட அவர்கள் காலப்போக்கில் கம்பெனிக்குள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

என்னையும், என் கணவரையும் தவறாக வழிகாட்டத் தொடங்கினர். பின்னர் எங்கள் நிறுவன டாக்குமென்ட்டுகளில் கையெழுத்திடும் அளவுக்கு வளர்ந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் 2010-ம் ஆண்டு 2 ஜி விவகாரம் பெரிதானது. சிபிஐ தரப்பால் எனது கணவரும் விசாரிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் சாஹித் பல்வா என்கிற நபர் என் கணவருக்கு மிகுந்த அழுத்தத்தையும் மிரட்டலையும் விடுத்தார்.

இந்நிலையில் விசாரணை நடக்கும்போதே என் கணவர் 2011 மார்ச் 16 அன்று மர்மமான முறையில் மரணமடைந்தார். என்னுடைய கணவர் மன தைரியமிக்கவர். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நான் நம்பவில்லை. அப்போதைய சூழலில் என் கணவர் மரணம் குறித்த விசாரணை கோரவோ, சிபிஐக்கு போதிய தகவல் அளிக்கும் மனோபலம் இல்லை.

எனது கணவர் மரணத்துக்குப் பின் அவரது நிறுவனத்தில் உள்ள அவரது பாகத்தை வாங்கவே பரமேஷ்குமார், மலர்விழி ராம், ராம் கணேஷ்  ஆகியோருடன் சட்ட ரீதியாகப் போராடவேண்டியிருந்தது. ஒவ்வோர் ஆண்டும் எனது கணவரின் நினைவு நாளன்று பத்திரிகைகளில் நினைவு விளம்பரம் அளிப்பேன். இந்த ஆண்டும் அதேபோன்று விளம்பரம் செய்திருந்தேன்.

இந்நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்த எனது காரை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தாக்கியது. காரை வேகமாக ஓட்டியதால் தப்பித்தோம். இதுகுறித்து பாதுகாப்பு கேட்டு உள்துறைச் செயலர் மற்றும் காவல் ஆணையரிடம் மனு அளித்தோம்.

என்னுடைய கணவர் மரணத்திற்குக் காரணமான நபர்கள்தான் ஆட்களை ஏவி எங்கள்மீது தாக்குதல் தொடுத்தார்கள் என்று நம்புகிறேன். எனது கணவர் மரணத்திற்குப் பின்னரும் என் குடும்பத்தினர் மீதான மிரட்டல் தொடர்கிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்த உரிய புலனாய்வு அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும்.

அந்தப் புலனாய்வு அமைப்பு, எங்கள்மீது தாக்குதல் நடத்தியவர்களைப் பிடித்து விசாரிக்கும் பட்சத்தில் எனது கணவரின் மரணத்திற்குப் பின்னுள்ள அரசியல் சக்திகள் வெளிவர வாய்ப்புள்ளது. முக்கியமாக புலன் விசாரணை நேரத்தில் என் கணவர் அளித்த வாக்குமூலத்தை மறு விசாரணை நடத்திட வேண்டும்.

மு.க.ஸ்டாலின், ஆ.ராசா உட்பட என் கணவர் யார் யாரை எல்லாம் குறிப்பிட்டாரோ அவர்களை விசாரிக்க வேண்டும். இதன்மூலம் என் கணவர் மரணத்தின் பின்னுள்ள மர்மங்கள் வெளிவரும். ஆகவே புலனாய்வு அமைப்புகள் உடனடியாக இது குறித்து மறு விசாரணை நடத்த வேண்டியது உடனடி அவசியமாகிறது.

அவ்வாறு நடக்காவிட்டால் எனக்கோ என் குடும்பத்தாருக்கோ உரிய நீதி கிடைக்காது''.

இவ்வாறு ரேஹா பானு புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரை குடியரசுத் தலைவர் மற்றும் சிபிஐ இயக்குனருக்கு அனுப்பியுள்ளார்.  

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x