Published : 30 Apr 2019 11:21 AM
Last Updated : 30 Apr 2019 11:21 AM

வன்முறையைத் தூண்டிவிடுகிறார் ராமதாஸ்: ஸ்டாலின் விமர்சனம்

இரா.முத்தரசன்  மற்றும் பேராயர் எஸ்ரா சற்குணம் ஆகியோருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்புகளை வழங்கிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பொன்பரப்பி வன்முறையைக் கண்டித்து சென்ற 24-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் விதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், "பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டி” ஓர் அறிக்கை வெளியிட்டு பதற்றச் சூழ்நிலையை உருவாக்கியிருப்பதற்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி வரும் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. சமூக நீதிப் போராளி பேராயர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவர். சமூக நல்லிணக்கத்திற்காக உழைக்கும் இவர்கள் மீது கூட, ராமதாஸ்-க்கு நம்பிக்கையில்லாமல் போனது மிகுந்த வேதனையளிக்கிறது.

யார் மீதுதான் அவருக்கு நம்பிக்கை என்ற கேள்வியும் எழுகிறது. தம்மை அரசியலில் இன்னமும் நிலை நிறுத்திக்கொள்ள ஆக்கப்பூர்வமான பல வழிமுறைகள் இருக்கும்போது, ராமதாஸ் பின்னடைவை ஏற்படுத்தும் வழியை ஏன் தேர்வு செய்கிறார் என்று அவர் மீது அன்பும் அக்கறையும் உள்ள பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

அவரே ஒரு கற்பனைப் பேச்சை மனதில் செயற்கையாகக் கற்பித்து உருவாக்கிக் கொண்டு - அதற்கு பதில் என்ற வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டு - இந்த இரு தலைவர்கள் மீதும் வன்முறையை வீசும் தொலைபேசி மிரட்டல்களுக்குக் காரணமாக இருப்பது பொறுப்புள்ள முதிர்ந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு அழகல்ல; உரிய செயலும் அல்ல!

தேர்தலில் கூட்டணிகளும், முடிவுகளும் வெற்றி பெறும் வகையில் பாமகவுக்கு அமையாமல் போய்விட்டதே என்ற வருத்தம் இருக்கலாம். இதுவே அரசியலின் இறுதிக் கட்டம் இல்லை. அரசியலில் பல ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்தவர் அவர். தேர்தல் அரசியலில் அவற்றை சகஜமாக எடுத்துக் கொள்வதே ராமதாஸ் போன்ற தலைவர்களுக்கு ஏற்ற குணமாக இருக்க முடியும்.

அதை விடுத்து - அமைதியாக நல்லிணக்கத்துடன் வாழும் சமுதாயங்களிடையே வெறுப்பைக் கக்கி, முத்தரசன் மற்றும் பேராயர் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவுக்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ தெரியாமலோ உருவாக்குவது நமது தமிழ்ச் சமூகத்திற்குப் பேராபத்தானது.

தேர்தல் வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் பொதுவானவை என்பதை ராமதாஸ் நன்கறிவார். ஆகவே ராமதாஸ் மீண்டும் இதுபோன்ற பதற்றச் சூழ்நிலைகள் உருவாகிடக்  கிஞ்சிற்றும் இடம் கொடுக்காமல் - தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் நட்புறவோடும் வாழ்வதற்கு ஏற்ற சுமூகமான சூழ்நிலைகளை மட்டும் உருவாக்கி - பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டமக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேலும் மேலும் முன்னேறுவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எல்லாவற்றையும் அறிந்திருப்பவர் அவர். அவருக்கு இது நிச்சயமாக அறிவுரை அல்ல; மனப்பூர்வமான வேண்டுகோள். இரா.முத்தரசன்  மற்றும் பேராயருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்புகளை வழங்கி மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும்  உறுதியோடு பாதுகாத்திட வேண்டும்" என, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x