சாடிய முதல்வர் எடப்பாடி: புகைப்படம் மூலம் பதிலடி கொடுத்த உதயநிதி - அதிமுகவினர் அதிர்ச்சி

சாடிய முதல்வர் எடப்பாடி: புகைப்படம் மூலம் பதிலடி கொடுத்த உதயநிதி - அதிமுகவினர் அதிர்ச்சி
Updated on
1 min read

தன்னை சாடிய முதல்வர் எடப்பாடியை, தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

நடிப்புக்கு ஒரு மாதம் முழுக்கு போட்டுவிட்டு, தீவிர அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.

தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். தனக்கு கூட்டம் கூடுமளவுக்குக் கூட முதல்வரின் பிரச்சாரத்துக்கு கூடுவதில்லை என்றெல்லாம் முதல்வர் எடப்பாடியை விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது மக்களிடையே பேசுகையில், “தன் அப்பா கருணாநிதியின் செல்வாக்கால் முன்னுக்கு வந்தவர் ஸ்டாலின். அதிகாரத்தில் இல்லாத போதே திமுகவினர் அராஜகம் செய்கிறார்கள். ஆளுங்கட்சியாக வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஆட்சியை கலைக்க ஸ்டாலின் தினமும் ஒரு போராட்டத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார். மரியாதை என்னவென்று தெரியாத உதயநிதி ஸ்டாலின் வாரிசு அரசியல் செய்கிறார். என்னுடைய அரசியல் அனுபவத்தின் வயது கூட இல்லாத உதயநிதி ஸ்டாலினை வைத்து சவால் விடுவதா?”என்று கடுமையாக விமர்சித்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இது செய்தியாக வெளியானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆமாம் ! உங்க அளவுக்கு அனுபவம் இல்லை!” என்று தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக சசிகலா அறிவித்த போது, அவரது காலில் விழுவது போல் இடம்பெற்றிருந்தது.

தற்போது சசிகலா குடும்பத்தினர் யாருமே அதிமுகவில் அங்கம் வகிக்கவில்லை. பழைய புகைப்படத்தை எடுத்து பதிவிட்டு, தமிழக முதல்வரை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in